ADDED : ஜூன் 27, 2025 03:44 AM

சென்னை: திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி:
மறைந்த கருணாநிதி, கடைசி வரை தி.மு.க., தலைவராக இருந்தார். அப்போது, ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை; தன் தந்தைக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கவில்லை. அவர் போல என் மகன் இல்லையே?
ஆதிகாலத்தில் இருந்து கிளைச்செயலர், ஒன்றிய செயலர், மாவட்டச் செயலர் என பா.ம.க.,வில் பல்வேறு பொறுப்புகளில் தன்னலம் கருதாது பணியாற்றி, ஒதுக்கப்பட்டவர்களுக்கு தான் இப்போது பொறுப்புகளை கொடுத்திருக்கிறேன்.
இந்த பொறுப்புகள் நிலைத்து நீடித்து இருக்கும். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.
தற்காலிக பொறுப்பு என யார் சொன்னாலும், அதில் உண்மையில்லை.
தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த அன்புமணி போஸ்டரை, விஷமிகள் கிழித்திருக்கலாம். யாருடைய போஸ்டரையும் கிழிக்கக்கூடாது. என் 60ம் ஆண்டு திருமண நாளுக்கு, மகன் அன்புமணி வராதது வருத்தம் தான்.
விரைவில் பா.ம.க., பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து முடிவு செய்வேன்.
கட்சியின் செயல் தலைவர் பதவி அன்புமணிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் ஏற்றுக் கொண்டால், பிரச்னை தானாகவே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், செயல் தலைவர் பதவியை ஏற்க, அன்புமணி மறுக்கிறார். இருந்தபோதும், பிரச்னைக்கு தீர்வு காண பேசிக்கொண்டே இருக்கிறோம்.
நான், பதவி சுகத்தை விரும்புவது போல வெளியில் செய்தி பரப்புகின்றனர். அப்படி நான் விரும்பியிருந்தால், மத்தியில் எந்த பதவியும் கிடைத்திருக்கும். நான்கு பிரதமர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். இன்றைக்கும் பிரதமர் மோடி என்னோடு நட்பாக இருக்கிறார். அரசு பதவிக்கு போகக்கூடாது என்று சத்தியம் செய்திருக்கிறேன்.
நான் சுயம்புவாக உருவாக்கிய கட்சிக்கு, என் மூச்சு இருக்கும் வரை தலைவராக இருப்பேன். எனக்கு பின் முகுந்தனோ, சுகந்தனோ தலைவர் பொறுப்புக்கு வரப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.