/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
/
பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 12, 2024 05:22 AM
புதுச்சேரி: பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் காரிப் மற்றும் ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு செய்யும் வழிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த 2016ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் பயிர் கடன்களை எடுத்த விவசாயிகளின் பயிர்கள் தானாகவே காப்பீட்டின் கீழ் வருகிறது. மற்ற பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கான காப்பீட்டை அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் இணைத்து கொள்ளலாம்.
சொர்ணவாரி, சம்பா, நவரை பருவத்திற்கான நெல், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, கரும்பு, வாழை பயிர்களை காப்பீடு செய்யலாம். பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் காரிப் மற்றும் ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு தேதியை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
காரிப் சொர்ணவாரி நெல் பயிருக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். காரிப் சொர்ணவாரி வாழைக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ரபி பருவத்திலும் நெல், மணிலா, பச்சை பயிறு, கரும்பு, வாழை பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் உதவியகங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்து உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விதை சான்றிதழ் பெற வேண்டும். விதைப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் முதல் பக்க நகலை இணைத்து பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய புதுச்சேரி பகுதி விவசாயிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
இத்திட்டத்தில் மத்திய மாநில பங்களிப்போடு கூடிய விவசாயிகளின் பிரிமியம் தொகை மாநில அரசே செலுத்துகிறது. விவசாயிகள் எதிர்பாராத வானிலை மாற்றங்கள், பூச்சி நோய் தாக்குதல், மகசூல் இழப்பு, இயற்கை பேரழிவுகளில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்க காப்பீடு அவசியம், பயிர் இழப்பு ஏற்பட்டால் கடன் பெற்ற விவசாயிகள் தங்கள் வங்கிகளுக்கு தெரிவிக்கலாம்.
கடன் பெறா விவசாயிகள் காப்பீடு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் 18002095858 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.