/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்! முழு தகவல்களை திரட்ட கவர்னர் அதிரடி உத்தரவு
/
சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்! முழு தகவல்களை திரட்ட கவர்னர் அதிரடி உத்தரவு
சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்! முழு தகவல்களை திரட்ட கவர்னர் அதிரடி உத்தரவு
சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்! முழு தகவல்களை திரட்ட கவர்னர் அதிரடி உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : ஆட்சியாளர்களை பிடித்து சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டினால் தஞ்சம் புகுந்துள்ள அரசு ஊழியர்களால் பல்வேறு அரசு துறைகளில் கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக கவர்னரின் கவனத்திற்கு புகார் சென்றதை தொடர்ந்து அனைத்து துறைகளிலும் சர்வீஸ் பிளேஸ்மெண்டில் சென்ற அரசு ஊழியர்கள் பட்டியல் திரட்டப்பட்டு வருகின்றது.
புதுச்சேரியில் புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மெண்ட அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.இதனால் மக்கள் பணி பாதிக்கப்படுவதோடு, அரசு நிதி பல கோடி வீணடிக்கப்பட்டு வருகிறது. துறை செயலரின் உத்தரவு இல்லாமல் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பணிபுரிய ஊழியர்களை அனுப்பக்கூடாது என 14.3.2019 அன்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கிடுக்கிபிடி
இப்பொழுது மீண்டும் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பலர் ஆட்சியாளர்களை பிடித்து விருப்பமான இடங்களுக்கு சென்று பணிபுரிந்து வருவது அதிகரித்து வருகின்றது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக கவர்னர் ராதாகிருஷ்ணனிடம் புகார் சென்றதை தொடர்ந்து முழு விபரங்களை திரட்ட உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து துறைகளுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பி,சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டில் ஒவ்வொரு துறையிலும் தஞ்சம் புகுந்துள்ள அரசு ஊழியர்கள் பெயர் பட்டியலை கேட்டுள்ளது.
அதில் எந்த துறையில் இருந்து சர்வீஸ் பிளேஸ்மெண்டில் தற்போதைக்கு பணிக்கு வந்தார். எவ்வளவு காலமாக அங்கு இருக்கிறார் என்ற தகவல்களையும் குறிப்பிட்டு அவசரமாக அனுப்பி வைக்க நிர்வாக சீர்த்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகள் மட்டுமின்றி தன்னாட்சி நிறுவனங்கள், சொசைட்டி, வாரியங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் தகவல்களும் கோரப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கிடைத்ததும்,கவர்னர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஆணை இல்லை
சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டில் செல்லுபவர்களுக்கு முறையான ஆணை ஏதும் இல்லை. இவர்கள் அலுவலக ஆணையில்லாமல் வெள்ளை பேப்பரில் அதிகாரிகள் கையெழுத்திட்டு அங்கீகாரமில்லாமல் பொதுப்பணித்துறையில் எம்.டி.எஸ், வவுச்சர் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ., முன் னாள் அமைச்சர்களிடமும் பணிபுரிந்து வருகின்றனர்.
சோம்பேறி டிரண்ட்
மற்றொரு பக்கம் இருந்த சர்வீஸ் பிளேஸ்மெண்ட் சோம்பேறி டிரண்டையும் புதுச்சேரி அரசு துறைகளில் உருவாக்கியுள்ளது.சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டில் பிற துறைகளுக்கு செல்ல வேண்டிய சிலர் அந்த இடங்களுக்கு கூட செல்லாமல் வீட்டிலே இருந்து கொண்டும் சம்பளம் பெறுவதும் நடக்கின்றது. இதனால் அரசு நிதி கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்க உள்ளது.
சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டில் பிற துறைகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பிறதுறையில் இருக்க வேண்டும் என்ற கால வரையறை ஏதும் இல்லை.இதனால் மற்ற அரசு ஊழியர்கள் பணிச் சுமையில் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.
அலுவலக ஆணைப்படியும், முறைப்படி உத்தரவு இல்லாமலும் சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களையும் திரும்ப அவரவர் பணிக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதோடு கால வரையறை செய்ய வேண்டும் என நீண்ட காலமாக போர்க்கொடி உயர்த்தி வந்தனர். கவர்னரின் அதிரடி உத்தரவு மன குமுறலில் இருந்த அரசு ஊழியர்களை நிம்மதியடைய செய்துள்ளது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா
துறை செயலரின் உத்தரவின்றி அலுவலக ஆணை பிறப்பித்து சர்வீஸ் பிளேஸ்மெண்ட் அடிப்படையில் பணிபுரிய அனுப்பிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் சர்வீஸ் பிளேஸ்மெண்ட்டில் பிற துறைகளுக்கு தஞ்சம் புகுந்து 'ஓபி'அடிப்பது தடுக்கப்படும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.