/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயம் தோற்றது ஏன்? 'திடுக்' தகவல்கள் அம்பலம்
/
நமச்சிவாயம் தோற்றது ஏன்? 'திடுக்' தகவல்கள் அம்பலம்
நமச்சிவாயம் தோற்றது ஏன்? 'திடுக்' தகவல்கள் அம்பலம்
நமச்சிவாயம் தோற்றது ஏன்? 'திடுக்' தகவல்கள் அம்பலம்
ADDED : ஜூன் 07, 2024 06:50 AM

கூட்டணி கட்சியினர் உள்ளடி: சொந்த கட்சியினர் 'சைலண்ட் மோட்'
புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தின் தோல்விக்கான காரணங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்., கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., வுக்கு 3 ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 12 எம்.எல்.ஏ.,க்கள் என இந்த கூட்டணிக்கு 22 எம்.எல்.ஏ.,க்களின் பலம் உள்ளது. இருந்தபோதும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 516 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
கூட்டணி கட்சியான என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில் இந்திரா நகரை தவிர்த்து, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் மற்ற 9 தொகுதிகளிலும் பா.ஜ., பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதுபோல, ஏனாமை தவிர்த்து பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
இது, கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., - என்.ஆர். காங்., கைகோர்த்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தாலும், லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சியினரின் அரசியல் கணக்கு வேறு மாதிரியாக உள்ளதையே காட்டுகிறது.
தொகுதி பறிபோகும் அச்சம்
அதாவது, பா.ஜ., தங்களுடைய தொகுதியில் வளரவே கூடாது என்ற மனநிலையில் கூட்டணி கட்சியினர் இருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. லோக்சபா தேர்தலில் தங்களுடைய தொகுதியில் பா.ஜ., வேட்பாளருக்கு கூடுதல் ஓட்டுகளை பெற்று கொடுத்தால், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தங்களது தொகுதியை பா.ஜ., கேட்கும் என நினைத்து, பா.ஜ.,வை ஒழித்து கட்டுவதற்கு வேலை பார்த்துள்ளனர்.
தொகுதியில் பா.ஜ., வளர்ந்துவிட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மனநிலையிலேயே கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலரும் வேலை செய்யவில்லை. மேலும், தோல்விக்கு தற்போதுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு தருகின்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பலரும் மற்றொரு காரணமாக மாறி உள்ளனர். தங்கள் தொகுதியில் பா.ஜ., வேட்பாளருக்கு அதிக ஓட்டுகளை வாங்கி தந்தால், எதிர்காலத்தில் தொகுதி தங்களிடம் இருந்து கைநழுவி விடும் என விபரீத கணக்கு போட்டுள்ளனர்.
இதற்கு காரணம் என்னவென்றால், தற்போதுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானவர்கள் ஒரிஜனல் பி.ஜே.பி., கிடையாது. கடந்த தேர்தலின்போது, எல்லோருமே வெளியில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள் தான்.
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பா.ஜ.,க்கு வந்த அல்லது பா.ஜ.,வில் கட்டாயமாக இணைக்கப்பட்ட இவர்கள், தங்களை பற்றி மட்டுமே சிந்தித்துள்ளனர். நமச்சிவாயத்திற்கு அதிக ஓட்டுகள் வாங்கி தந்தால், இந்த தொகுதி பா.ஜ.,விற்கு சொந்தமாகிவிடும் என்று பலரும் வேலை செய்யவில்லை. தீவிரமாக தேர்தல் பணியாற்றுவதாக 'பாசாங்கு' மட்டுமே செய்து கொண்டு இருந்தனர்.
வன்னியர் ஒட்டு யாருக்கு
அமைச்சர் நமச்சிவாயம், பெரும்பான்மை வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால், வன்னியர் சமுதாய ஓட்டுகள் அனைத்தும் அவருக்கே விழும் என பா.ஜ., தலைமை எதிர்பார்த்தது. ஆனால், பெரும்பாலான வன்னியர்கள் நமச்சிவாயத்துக்கு ஓட்டு போட விரும்பவில்லை.
உதாரணமாக, வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் மங்கலம், மண்ணாடிப்பட்டு, பாகூர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட எந்த தொகுதிகளிலும் நமச்சிவாயத்திற்கு ஓட்டுகள் விழவில்லை. இதுவும், தோல்விக்கு காரணமாக அமைந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக 'பவர்புல்' அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. ஏனென்றால், பொதுமக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றி தரவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது, லோக்சபா தேர்தலில் நமச்சிவாயத்திற்கு எதிராக திரும்பியது.
மேலும், சக எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி தொடர்பாக வைத்த கோரிக்கைகளையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், நமச்சிவாயத்திற்கு ஓட்டு கேட்பதற்கே பல எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து தொகுதிகளிலுமே அமைச்சர் நமச்சிவாயத்தின் மீது மிகப்பெரிய அதிருப்தி நிலவியதும் மிகப் பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது.
உதாரணமாக, முத்தியால்பேட்டையில் கஞ்சா கும்பலால் சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர சம்பவத்தில் நாடே கொந்தளித்தது. மாநில மக்களும் துயரத்தில் பங்கேற்றனர்.
வேட்பாளர் மீது அதிருப்தி
அப்போது கவர்னராக இருந்த தமிழிசை, சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். ஆனால், போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் ஆறுதல் சொல்ல செல்ல வில்லை.
மேலும், இந்த துயர சம்பவத்தை அமைச்சர் நமச்சிவாயம் சரியாக கையாளவில்லை. இதனால், முத்தியால்பேட்டை தொகுதி மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்தார்.முத்தியால்பேட்டை தொகுதியைபோல ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பிரச்னையில் மக்கள் மத்தியில் அமைச்சர் நமச்சிவாயம் மீது கடுமையான அதிருப்தி நிலவியது. இதுவே, நமச்சிவாயத்தின் படுதோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
வைத்திலிங்கம் வெற்றி பெற்றது எப்படி?
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் எளிதாக வெற்றி பெற்றதற்கு காரணம், அவர் மீது பொதுமக்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லை. வைத்திலிங்கம் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் அவர் மீது தனிப்பட்ட அதிருப்தி இல்லாதது வெற்றிக்கு கை கொடுத்தது.
மேலும், கூட்டணி கட்சியான தி.மு.க.,வினரின் ஒருங்கிணைந்த, கடுமையான உழைப்பு வைத்திலிங்கத்தின் வெற்றியை எளிதாக்கியது. 'நாற்பதும் நமதே' என்ற இலக்கை எட்டுவதற்கு, தி.மு.க., தலைமையின் உத்தரவுபடி, காங்., வேட்பாளருக்கு கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் புதுச்சேரி தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டது.
தனது மாநில அமைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, தி.மு.க., அமைப்பாளர் சிவா தனிப்பட்ட முறையிலும் கடினமாக உழைத்தார். இப்படி, தி.மு.க.,வின் ஒருங்கிணைந்த கடின உழைப்பும், காங்., வேட்பாளருக்கு கூடுதலான ஓட்டுகளை பெற்று தந்து வெற்றிக்கு வழி வகுத்தது.