/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி... தீவிரம்; வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு
/
புதுச்சேரியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி... தீவிரம்; வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு
புதுச்சேரியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி... தீவிரம்; வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு
புதுச்சேரியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி... தீவிரம்; வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு
ADDED : செப் 17, 2025 03:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் குடிநீரில் உவர் தன்மை 1000 டி.டி.எஸ்., அளவிற்கு மேல் உள்ள பகுதிகளில் வீட்டிற்குபொதுப்பணித்துறை சார்பில், 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில், குடிநீர் வினியோகம் நிலத்தடி நீரையே ஆதாரமாக கொண்டுள்ளது. நகரப் பகுதி குடிநீர் வினியோகத்திற்காக பொதுப்பணித்துறை சார்பில் தினசரி 15 கோடி லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து, சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருவதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்தன்மையாக மாறியுள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் கலங்களாக வந்தது. கடந்த 7ம் தேதி மீண்டும் அதேபகுதியில் பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மூதாட்டி உட்பட மூவர் இறந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு தினசரி 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் துவங்கினர்.
அரசு விளக்கம் இந்நிலையில், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் பகுதியை கண்டுபிடித்து சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுத்தமான குடிநீர் வினியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நேற்று விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு:
உருளையன்பேட்டையில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 60 பேர் கொண்ட 5 குழுவினர், குடிநீர் குழாய்களை ஆய்வு செய்யும் பணியை கடந்த 8 ம் தேதி துவங்கினர். ஒரு வாரம் நடைபெற்று வந்த ஆய்வில், முத்தரையர்பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் இருந்து பிரிந்து சக்தி நகர் 8 மற்றும் 9வது குறுக்கு வீதிகளுக்கு செல்லும் குழாய், வடிகால் வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பதை கடந்த 14ம் தேதி மாலை கண்டுபிடித்தனர்.
சீரமைப்பு அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வடிகால் வாய்க்காலுக்கு கீழாக சென்ற குடிநீர் குழாயை, வாய்க்காலுக்கு மேல் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்று 17 ம் தேதிக்குள் முடித்து, குடிநீர் குழாயில் 'வாஷ் அவுட்' கொடுத்த பின் சுத்தமான குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு பணி முடிவடைந்தாலும், குடிநீரில் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளனவா என சோதனை செய்து, தரமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், குடிநீரில் நோய் பரப்பும் பாக்டீரியாக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக 'குளோரின்' அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 50 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் தற்போது நகரப் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் 30 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் இயங்கி வருகிறது. மேலும், 50 சுத்திகரிப்பு குடிநீர் நிலையங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் 2 மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வந்ததும், தற்போது 7 நீரேற்று நிலையங்களில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரில் உவர்தன்மை 1,000 டி.டி.எஸ்.,அளவிற்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தினசரி 20 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் கேன் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம், கடல் நீரை குடிநீராக மாற்றும் நிரந்தர திட்டம் நிறைவேறும் வரை தொடரும்.
பொதுப்பணித்துறை பராமரிப்பில் 450 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய்களும், 400 கி.மீ., நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் உள்ளது. இந்த குழாய்களின் எங்கேனும் உடைப்பு அல்லது அடைப்பு ஏற்பட்டதை கண்டால், உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அதேபோன்று, குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் இணைந்து சென்றால், அந்த பகுதியை கவனமாக பார்க்கவும். குழாய்களில் நீர் கசிவு இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.