/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்காவல்படை வீரர் பணிக்கு நாளை... எழுத்து தேர்வு! 12 மையங்களில் 4,229 பேர் பங்கேற்பு
/
ஊர்காவல்படை வீரர் பணிக்கு நாளை... எழுத்து தேர்வு! 12 மையங்களில் 4,229 பேர் பங்கேற்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு நாளை... எழுத்து தேர்வு! 12 மையங்களில் 4,229 பேர் பங்கேற்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு நாளை... எழுத்து தேர்வு! 12 மையங்களில் 4,229 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 29, 2024 06:35 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஊர்காவல்படை வீரர் பணிக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.
புதுச்சேரி போலீசில் 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வுக்கு, ஆன்லைனில் கடந்த ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டன. இதில், ஆண்கள் 15,697 பேர், பெண்கள் 4,492 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த பிப்., மாதம் நடந்தது. ஆண்கள் 3,034 பேரும், பெண்கள் 1,195 பேர் என, மொத்தம் 4229 பேர் தகுதி பெற்றனர். உடற்தகுதி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை 30ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது.
தேர்வுக்காக காந்தி வீதி பெத்திசெமினார், பாரதிதாசன் கல்லுாரி, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா, லாஸ்பேட்டை வள்ளலார் பெண்கள் பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கல்லுாரி, பெண்கள் பொறியியல் கல்லுாரி, உப்பளம் இமாகுலேட் பள்ளி என, 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளை கண்காணிக்க 500 அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹால்டிக்கெட்டில் தேர்வர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஹால்டிக்கெட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இந்த தேர்வுக்கு, கைரேகை (பயோ மெட்ரிக்) வருகைப்பதிவு செய்யப்பட இருப்பதால், தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையத்திற்குள் கருப்பு பேனா, ஹால்டிக்கெட், அசல் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வர வேண்டும். கைப்பை, மொபைல்போன், ப்ளூடூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு, அனைத்து தேர்வு அறைகளும் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து தேர்வர்களுக்கும் கைரேகை வருகைப்பதிவு செய்து, சோதனையிடப்பட்ட பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதுவரை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்கள், உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அலுவலக நேரத்தில், 0413- - 2233338 என்ற தொலைபேசி எண்ணில் இன்று 29ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8:30 மணிக்கு வர வேண்டும்
தேசிய அளவில் நடக்கும் போட்டி தேர்வுகள் தேர்வு துவங்கிய 30 நிமிடம் வரை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால், நாளை நடைபெறும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும். காலை 9:30 மணிக்கு முன் தேர்வு அறைக்கு வர வேண்டும். அதன்பின்பு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மையம் கேட் காலை 9:30 மணிக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு மையங்களை தெரிந்து கொண்டு, காலை 8:30 மணிக்கே தேர்வு அறைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.