/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரிஷாப் விளாசல்: பயிற்சியில் இந்தியா அசத்தல்
/
ரிஷாப் விளாசல்: பயிற்சியில் இந்தியா அசத்தல்
ADDED : ஜூன் 01, 2024 11:45 PM

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் அரைசதம் விளாசினார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. நேற்று நியூயார்க்கில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன்(6) ஜோடி துவக்கம் கொடுத்தது.
சாகிப் அல் ஹசன் வீசிய 3வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோகித், ஷோரிபுல் பந்தை சிக்சர் அனுப்பினார். போட்டியின் 6வது ஓவரை வீசினார் சாகிப். இதன் முதல் இரு பந்தில் சிக்சர் அடித்த ரிஷாப், கடைசி பந்தில் சிக்சர் விளாச, மொத்தம் 22 ரன் எடுக்கப்பட்டன. ரோகித் (23), மகமதுல்லா பந்தில் அவுட்டானார்.
ரிஷாப் அரைசதம்
சவுமியா ஓவரில் இரு பவுண்டரி அடித்த ரிஷாப், மகமதுல்லா பந்தை சிக்சருக்கு விரட்டினார். சாகிப் பந்தில் பவுண்டரி அடித்து, 32 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்னில் 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். ஷிவம் துபே 14 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.
தன்விர் வீசிய போட்டியின் 17 வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார். சாகிப் பந்தில் பவுண்டரி அடித்த சூர்யகுமார் 18 பந்தில் 31 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. பாண்ட்யா (40 ரன், 23 பந்து), ஜடேஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
அர்ஷ்தீப் 'இரண்டு'
பின் களமிறங்கிய வங்கதேச அணிக்கு சவுமியா (0), லிட்டன் தாஸ் (6), கேப்டன் நஜ்முல் (0), தவ்ஹித் (13) நிலைக்கவில்லை. சாகிப் 28 ரன் எடுத்தார். மகமதுல்லா (40) கைகொடுத்த போதும், வெற்றிக்கு போதவில்லை. வங்கதேச அணி 20 ஓவரில் 120/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட் சாய்த்தார்.