/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது: திருமாவளவன்
/
பொதுவாக மரண தண்டனை கூடவே கூடாது: திருமாவளவன்
ADDED : ஜூலை 16, 2024 08:24 AM

பெரம்பலூர்: பொதுவாக மரணத் தண்டனை கூடவே கூடாது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.
தந்தை தொல்காப்பியன் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அங்கனூரிலுள்ள அவரது நினைவிடத்தில் திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 3 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி என கல்வியை நடைமுறைப்படுத்தியவர் காமராஜர். இதனால் தான் தமிழகம் கல்வித் தரத்தில் உயர்ந்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் இருந்தும், தமிழகத்துக்கு கல்வி கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு காமராஜரின் பங்களிப்பு மகத்தானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி என சொல்லக்கூடிய நிலையில் என்கவுன்டர் நடந்துள்ளது. பொதுவாக என்கவுன்டர், மரண தண்டனை கூடவே கூடாது என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாகும்.
சட்டபூர்வமாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனையாக வழங்கலாம். தமிழகத்துக்கான உரிய நீரை திறந்து விட வேண்டும் என இண்டியா கூட்டணி சார்பில் கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். காவிரி ஒழுங்காற்று குழு என்ன ஆணையிட்டுள்ளதோ, அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கர்நாடகா அரசுக்கு உள்ளது.
காவிரி பிரச்னை என்பது தமிழக அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் இடையிலான மாநில பிரச்சனை என கருதி மத்திய அரசு அமைதி காக்க கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீட் தேர்வு விலக்கு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு கடிதம் எழுதி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி பிரச்னையில் மத்திய அரசு வேடிக்கை பார்த்தால் உடனடியாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றார்.