/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பின்னோக்கி ஓடும் போட்டி அரியலுார் வாலிபர் அபாரம்
/
பின்னோக்கி ஓடும் போட்டி அரியலுார் வாலிபர் அபாரம்
ADDED : ஜூன் 28, 2025 07:49 PM

அரியலுார்:பின்னோக்கி ஓடும் தடகள போட்டியில் உலக சாதனை படைத்த அரியலுார் வாலிபர், 100 மீட்டர் துாரத்தை, 13.54 வினாடியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அரியலுார் மாவட்டம், கருப்பூர் சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆறுபடையப்பா, 24. பி.லிட்., தமிழ் பட்டதாரியான இவர், சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்தார்.
மேலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை போல சாதனை படைத்து, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என, இவர் விரும்பினார்.
அவர், முன்னோக்கி ஓடி சாதனை படைத்தது போன்று இல்லாமல், பின்னோக்கி ஓடி சாதனை படைத்தால் என்ன என, இவருக்கு தோன்றியது.
தொடர் பயிற்சி காரணமாக பின்னோக்கி ஓட ஆரம்பித்த ஆறுபடையப்பா, பயிற்சியின் போது பலமுறை விழுந்து காயம்பட்டுள்ளார். ஆனாலும், மனம் தளராத ஆறுபடையப்பா, விடாமுயற்சியை கைவிடாமல் பின்னோக்கி ஓடுவதை நிறுத்தவில்லை.
இதன் பயனாக பஞ்சாப் இந்தியன் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்சில், 14.40 வினாடியில், 100 மீட்டரை பின்னோக்கி ஓடி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், உலக சாதனையில் இடம்பெறும் வகையில் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், லேனிஷ் வேர்ல்டு ரெக்கார்ட் குழு சார்பில், இதற்கான போட்டி நடந்தது.
லேனிஷ் வேர்ல்டு ரெக்கார்ட் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற, 100 மீட்டர் பின்னோக்கி ஓடும் போட்டியில் ஆறுபடையப்பா, 13.54 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். இந்த பிரிவில் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆறுபடையப்பா முதல் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.