/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓணம்பாக்கம் சமணர் படுக்கைகள் சுற்றுலாத்தலமாக மாற்ற எதிர்பார்ப்பு
/
ஓணம்பாக்கம் சமணர் படுக்கைகள் சுற்றுலாத்தலமாக மாற்ற எதிர்பார்ப்பு
ஓணம்பாக்கம் சமணர் படுக்கைகள் சுற்றுலாத்தலமாக மாற்ற எதிர்பார்ப்பு
ஓணம்பாக்கம் சமணர் படுக்கைகள் சுற்றுலாத்தலமாக மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 22, 2025 10:47 PM

செய்யூர்,:ஓணம்பாக்கத்தில் உள்ள பழமையான சமணர் படுக்கையை, சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே ஓணம்பாக்கம் பகுதியில் குறத்தி மலை, கூசாமலை, பட்டி மலை, வெண்மணி மலை என, நான்கு மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.
இவற்றில் குறத்தி மலையும், கூசாமலையும் சமண முனிவர்களால், 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டு உள்ளன.
குறத்தி மலையில், பார்சுவநாதர் சிற்பம் காணப்படுகிறது. பார்சுவநாதர் தலைக்குப் பின்புறம், ஐந்து தலை நாகம் விரிந்த நிலையில் வடிக்கப்பட்டு உள்ளது.
இருபுறமும் யக் ஷன், யக் ஷி சாமரம் வீசுவது போல, இந்த சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. பாறையின் மேற்பகுதியில், கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
வலப்புறம், கி.பி. எட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த கிரந்த கல்வெட்டு காணப்படுகிறது.
சற்று தள்ளி உள்ள பாறையில், ரிசபநாதர் பாறை புடைப்பு சிற்பமும், மகாவீரர் புடைப்பு சிற்பமும் காணப்படுகின்றன. மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், கிழக்கு நோக்கி ஐந்து சமண கற்படுக்கைகள் காணப்படுகின்றன.
கூசாமலையில் மேற்கு நோக்கி, ஐந்து சமண படுக்கைகள் காணப்படுகின்றன. இவ்விடத்திற்கு அருகில், இரண்டு சுனைகள் காணப்படுகின்றன.
இவற்றைக் காண பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள சமணப்பள்ளி சரியான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
பழமையான சமண பள்ளிக்குச் செல்ல சரியான பாதை இல்லாததால், பெரும்பாலான மக்கள் இங்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
மேலும், சமணர் படுக்கைள் அருகே, நாளுக்கு நாள் கல் குவாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இம்மலைகளில் உள்ள சமண சின்னங்கள் சேதமாக அதிக வாய்ப்பு இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழமையான சமண படுக்கைகளை அழியாமல் பாதுகாக்க, இப்பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். அத்துடன், இங்கு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.