/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் அடித்து கொலை? போதை கும்பல் கைவரிசை!
/
வாலிபர் அடித்து கொலை? போதை கும்பல் கைவரிசை!
ADDED : ஜூன் 07, 2024 12:16 AM
கொரட்டூர், சென்னை அடுத்த, திருவள்ளூர், பனப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன், 31; அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள, தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த, 1ம் தேதி இரவு, கொரட்டூரில், 'டாட்டூ' போடும் கடை ஒன்றில், தன் நண்பரை சந்திக்க காத்திருந்தார். அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்.
அப்போது, கஞ்சா போதையில் வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மீது, அவரது கால் உரசியது. அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது. அப்போது, ஆத்திரமடைந்த நால்வர் கும்பல், தீனதயாளனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து, உயிர் தப்பிய அவர், நண்பரின் உதவியுடன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, மருத்துவமனை வாயிலாக தகவலறிந்த கொரட்டூர் போலீசார், தீனதயாளனிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விபரம் தெரிந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கொரட்டூர் போலீசார், போதை கும்பலால், தீனதயாளன் தாக்கப்பட்டது உண்மையா? அவரை தாக்கியோர் யார் என, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.