/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் முனைவோருக்காக மேம்படுத்தப்படும் நுாலகங்கள்
/
தொழில் முனைவோருக்காக மேம்படுத்தப்படும் நுாலகங்கள்
ADDED : ஜூலை 15, 2024 01:11 AM
சென்னை:சென்னையில் 10 இடங்களில் உள்ள பொது நுாலகங்களை மின் வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிடங்களாக மாற்ற, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், 10 இடங்களில் உள்ள பொது நுாலகங்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதற்கான பணிகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு, உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில், அசோக் நகர், திரு.வி.க., நகர், பெரியார் நகர், அண்ணா நகர், கொளத்துார், ராயப்பேட்டை உள்ளிட்ட, 10 இடங்களில் உள்ள பொது நுாலகங்கள், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பகிர்வு பணியிடங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
சிறிய அளவில் தொழில் செய்வோர், அதற்காக தனியாக அலுவலகங்களை வாடகைக்கு எடுக்காமல், தனி நபர்கள் பயன்படுத்துவதற்கான அலுவலக வசதிகளை, வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
இதனால், தொழில்முனைவோருக்கான செலவுகள் குறையும். இதற்காக தேர்வு செய்யப்பட்ட நுாலகங்களின் தற்போதைய நிலவரம், அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பொது நுாலக துறை அதிகாரிகளின் ஆலோசனைகளும், இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்துடன் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை சூரிய சக்தியில் இயக்கும் திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.