/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறிய சரக்கு வாகனங்களுக்கு 'கிடுக்கி'
/
சிறிய சரக்கு வாகனங்களுக்கு 'கிடுக்கி'
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
சென்னை:சென்னையின் போக்குவரத்து நெரிசலை தடுப்பது, கடுமையான சவாலாக அமைந்துள்ளது. தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்யும் பணியில், சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா' இறங்கியுள்ளது.
இது குறித்து, கும்டா உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், சென்னை பெருநகர் என்ற அடிப்படையில், புதிய திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
வெளியூரில் இருந்து பெரிய அளவிலான சரக்கு வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள், சென்னைக்குள் வருவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. துறைமுகம்- மதுரவாயல் விரைவு சாலை போன்ற திட்டங்கள், இதற்காக செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், பெரும்பாலான சாலைகளில், சிறு, குறு சரக்கு வாகனங்களின் போக்குவரத்தில் காணப்படும் ஒழுங்கின்மையே, பல்வேறு பகுதிகளில் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
இதற்காக, சென்னை சிறு, குறு சரக்கு போக்குவரத்து திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சிறு, குறு சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை, பயன்பாடு, நிறுத்துமிட வசதி ஆகிய விபரங்கள் திரட்டப்படும். இத்துடன், இவற்றால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
நகரின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத்துவத்தை கவனத்தில் வைத்து, இப்புதிய திட்ட தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான அடிப்படை தகவல்கள் திரட்டும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.