/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 01:09 AM

சென்னை,மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில் நேற்று, சென்னையின் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
பல இடங்களில் மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், 'மத்திய அரசே தமிழகத்தை வஞ்சிக்காதே; மத்திய அரசு செய்வதெல்லாம் சரியில்லை' என, கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை எம்.பி., தயாநிதி பேசியதாவது:
மோடி ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.
பீஹாருக்கு 35,000 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ஆந்திராவுக்கு 16,000 கோடி ரூபாய் கடன் வாங்க, மத்திய அரசு உத்தரவாதம் தரும் எனக் கூறி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆப்பு வைத்துள்ளார். அவர் விரைவில் மோடிக்கு ஆப்பு வைப்பார்.
ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு வாரி வழங்கி, ஹிந்தி பேசாத மாநிலங்களை மோடி பழி வாங்குகிறார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிர்மலா சீதாரமன் திருக்குறள் கூறுவார். இந்த முறை திருக்குறளும் இல்லை. தமிழகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல், சைதாப்பேட்டையில் தென் சென்னை எம்.பி., தமிழச்சி தலைமையில், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர்.
ஆவடியில், எம்.எல்.ஏ., நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாம்பரத்தில் ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.