/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்
/
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் அதிர்ஷ்டவசமாக தப்பிய 20 குழந்தைகள்
UPDATED : ஜூலை 04, 2025 01:10 PM
ADDED : ஜூலை 04, 2025 12:50 AM
திருவொற்றியூர். மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள், 'பகீர்' தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர், தாங்கல் பீர்பயில்வான் தர்கா, 2வது தெருவைச் சேர்ந்தவர் அல்தாப். அவரது மகன் நவ்பல், 17; பிளஸ் மாணவர். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, டியூஷன் முடிந்து வீடு திரும்பினார். அப்போது, கனமழை காரணமாக, வீட்டு வாசலில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது.
தேங்கிய மழைநீரில் இருந்து மின்சாரம் பாய்ந்து, நவ்பல் சுருண்டு விழுந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஊர் நிர்வாகி துராபுதீன் என்பவர் ஓடி வந்து, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரையும் மின்சாரம் தாக்கியதால் சுதாரித்தவர், பிளாஸ்டிக் குழாயால் சிறுவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், நவ்பல் உயிரிழந்தார். இதற்கு காரணமான, மின்வாரியத்தை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நள்ளிரவில் மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
ஸ்டேஷன் முற்றுகை
இதற்கிடையில், நேற்று காலை, திருவொற்றியூர் காவல் நிலையம் முன் திரண்ட, நவ்பலின் உறவினர்கள், 300க்கும் மேற்பட்டோர், சாலையை சீரமைத்த மாநகராட்சி, மின் வடத்தை சரி செய்யாத மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான், இந்த விபத்து நிகழ்ந்தாக கூறி முற்றுகையிட்டனர்.
அதே சமயம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை - தாங்கல் பேருந்து நிறுத்தம் சந்திப்பில், பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மாணவனின் குடும்பத்திற்கு, ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். விபத்து நடந்த இடமருகே, குரான் படிக்கும் பயிற்சி பள்ளி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு பயின்று வருகின்றனர். கனமழை காரணமாக, குழந்தைகள் அங்கிருந்து வெளியே வராததால், அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பார்க்கவில்லை
தொடர் மழையால், தாழ்வாக இருக்கும் எங்கள் வீட்டில் மழைநீர் தேக்கம் இருந்தது. அப்போது, விபத்து நடந்த பகுதியில் மின்கசிவு ஏற்படுவதாக, அவ்வழியே வந்தவர் தெரிவித்தார். அதன் காரணமாக, என் பிள்ளை உட்பட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பயிற்சி பள்ளியில் இருந்து யாரும் வெளியே வராமல் கவனித்துக் கொண்டிருந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் தான், நவ்பல் அவ்வழியே சென்று விபத்தில் சிக்கினார். அவர் அந்த பக்கம் சென்றது பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்போம்.- தவ்லத், 32; இல்லதரசி, தாங்கல், திருவொற்றியூர்.
மின்வாரியத்தினர் போன் எடுக்கவில்லை
மின்சாரம் தாக்கி சிறுவன் சுருண்டு விழுந்திருப்பதாக, பகுதிமக்கள் கூறினர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று, அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், என்னுடன் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கும் மின்சாரம் தாக்கியது. பின், வேறு வழியின்றி பிளாஸ்டிக் குழாயால் சிறுவனை மெல்ல நகர்த்தி மீட்டோம். மின்கசிவு குறித்து, பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். சம்பவத்தன்று யாரும் போனை எடுக்கவில்லை.
- ஏ. துராபுதீன், 48, தாங்கல் குடியிருப்போர் சங்க நிர்வாகி.
மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை
திருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் தெருவைச் சேர்ந்த அல்தாப்பின் மகன் நவ்பல், 17, தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். அதற்கு முன், அதே பகுதியில், மழைநீர் வடிகால் சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன், சின்ன குருசாமி ஆகியோர் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு உயிர் தப்பினர். அப்போதாவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மின் வாரியம் எடுத்திருந்தால், நவ்பல் உயிர் பறிபோயிருக்காது. இந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கான காரணம். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் வழங்குவதுடன், அலட்சியமாக செயல்பட்ட மற்றும் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீமான், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர்.
ஒரு நாள் மழைக்கே நீர் தேங்கும் அளவிற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், பலநாள் புகார் அளித்தும், ஒரு சிறு மின் கசிவை கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்து கொண்டு, 'நாடு போற்றும் நல்லாட்சி' என, தி.மு.க.,வினர் விளம்பரப்படுத்தி கொள்வதில் எந்த பயனும் இல்லை. சென்னையில் முறையான மழை நீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.
திருவொற்றியூர் பகுதியில் மின் கேபிள்கள் வீட்டு வாசல்களிலும், மேல்புறத்திலும் முறையில்லாமல் புதைக்கப்பட்டுள்ளன.சிங்கார சென்னை, சீரழிந்த சென்னையாக குண்டும் குழியுமாக மாறி, மழை நீர் தேங்கி உயிர்களை பலி வாங்குவதாக உள்ளது. உயிரிழந்த சிறுவனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். சிறுவனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.
- பிரேமலதா, தே.மு.தி.க., பொதுச்செயலர்