/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாதாரண துாறல் போட்டாலே மணலியில் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
சாதாரண துாறல் போட்டாலே மணலியில் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
சாதாரண துாறல் போட்டாலே மணலியில் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
சாதாரண துாறல் போட்டாலே மணலியில் மின் தடை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 16, 2025 03:18 AM
மணலி:மணலி மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, மேற்பார்வை பொறியாளர் விஜயலட்சுமி, மண்டல பொறுப்பு அலுவலர் தேவேந்திரன், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பல துறைகளின் 92 பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேறின.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வார்டின் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர் பேசியதாவது:
நந்தினி, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கழிவுநீர் பணிக்காக தோண்டிய பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாததால், முதியவர் தவறி விழுந்துள்ளார். களத்தில் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை.
திட்டமிடலின்றி குழாய் பதிப்பு பணிகள் நடக்கின்றன. பாப்காட் இயந்திரத்தின் தேவை அதிகம் உள்ளது. ஒரு வாரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில், டன் கணக்கில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.
ராஜேந்திரன், 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ஆண்டார்குப்பம் உள்ளிட்ட ஐந்து இடங்களில், கழிப்பறை கோரி நான்கு மாதங்களாகி விட்டன. மலேரியா ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மின்வாரியத்தில் இருந்து யாரும் கூட்டத்திற்கு வருவதில்லை.
பிரச்னையின்போது, அதிகாரி, ஊழியர் யாரும் போனை எடுப்பது கிடையாது. 2011ல் அமைக்கப்பட்ட தெருவிளக்கு கம்பங்கள், துருப்பிடித்து விழும் வகையில் உள்ளன.
ஜெய்சங்கர், 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: தியாகி விஸ்வநாத தாஸ் நகர் உட்பட, நான்கு கழிப்பறைகள் சேதமடைந்துள்ளதால், இடித்து விட்டு புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. ஆறு லாரிகள் மட்டுமே போதாது. வடபெரும்பாக்கம், தீயம்பாக்கத்தில் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகமாகிறது. குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பெரியார் நகர், அரியலுார் பகுதிகளில் சாலை வெட்டுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. தெருவிளக்குகள் துருப்பிடித்து கீழே விழும் அளவிற்கு உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் உள்ளது.
ஸ்ரீதரன், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்
சாலை பணிகள், கால்வாய் அமைத்தலில் பெரும் தொய்வு உள்ளது. இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர்.
அவர்களை நல்வழிப்படுத்த விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். மரக்கிளைகள் வெட்டுவதில், மாநகராட்சி - மின்வாரியம் போட்டி போடுகின்றனர். வீடுகளுக்கு புதிய கதவு எண் எழுத வேண்டும். சுடுகாடுகளில், இறந்தவர் உடலை விறக்கிட்டு எரிப்பதற்கு அனுமதி தர வேண்டும். சாதாரண துாறல் போட்டாலே, மின் தடை ஏற்படுகிறது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், லாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மழைநீர் கால்வாய்கள் மீது, கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
காசிநாதன், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பாதாள சாக்கடை பணிகளை கடமைக்கு செய்கின்றனர். வார்டு முழுதும் மண் மேடாக உள்ளது. பள்ளத்தில் விழுந்து பலரும் காயமுறுகின்றனர். பொறுப்பே இன்றி வேலை செய்வதால், அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது.
முடிவுற்ற பணிகளுக்கு கல்வெட்டுகள் அமைக்க வேண்டும். குப்பை தான் அதிக பிரச்னையாக உள்ளது. பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிரப்ப வேண்டும், மழைநீர் வடிகால் மீது, கன்டெய்னர் லாரிகள் நிறுத்துவதால், சேதமடைய வாய்ப்புள்ளது.
சாலை வெட்டுகள் குறித்து, உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தடையின்மை சான்று வழங்கிய உடனே சாலைகள் அமைக்க திட்டமிட வேண்டும். மூன்று மாதமாக சில தெருக்களுக்கு, தடையின்மை சான்று வழங்கியும் பணிகள் மேற்கொள்ளவில்லை. மக்கள் அந்த சாலையில் நடந்து செல்ல வேண்டாமா, அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகள் குறித்து, உடனடியாக கணக்கெடுத்து, அதை மாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கட்டா ரவி தேஜா,
வடக்கு வட்டார துணை கமிஷனர்,
மாநகராட்சி.