/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைக்கு வயிற்றுபோக்கு; அலட்சியம் வேண்டாம்
/
குழந்தைக்கு வயிற்றுபோக்கு; அலட்சியம் வேண்டாம்
ADDED : ஜூன் 11, 2025 12:51 AM
சென்னை, 'சென்னையில் உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளில், 50 சதவீதம் பேருக்கு வயிற்று போக்கு பாதிப்பு உள்ளது' என, குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், சில நாட்களாக இயல்புக்கு மாறான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. பகலில் வெப்பமும், மாலையில் பலத்த மழையும் பெய்கிறது. திடீரென மாற்றமடையும் பருவமழையால், பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் வில்வநாதன் கூறியதாவது:
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெளியூர் பயணம், மழைப் பொழிவால் ஏற்பட்ட குடிநீர் மாசுபாடு, துரித உணவு உள்ளிட்டவை காரணமாக, அதிக குழந்தைகள் ஜீரண மண்டலம் சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
சிகிச்சை வருவோரில், 50 சதவீதம் பேருக்கு வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் உள்ளன. அதனால், ஒரு சில குழந்தைகளுக்கு நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்காத நிலையில், ஓரிரு குழந்தைகளுக்கு குடல் ஏற்ற பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு, சர்க்கரை கரைசல், நீர், மோர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை போதிய அளவு குழந்தைகளுக்கு வழங்கி, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.
டாக்டர்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப, சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்து கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு, சர்க்கரை கரைசல், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.
அவற்றுடன், காய்ச்சிய நீரை பருகுவதுடன் வெளி உணவுகளை தவிர்ப்பது முக்கியம். இந்த காலகட்டத்தில் குடிநீர் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க, 'ஹெபடைடிஸ் ஏ' தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும், ரோட்டா வைரஸ் தடுப்பூசியும், டாக்டரின் கண்காணிப்பில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***