/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரிசூலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு
/
திரிசூலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு
திரிசூலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு
திரிசூலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு
ADDED : ஜூன் 11, 2025 12:51 AM

பல்லாவரம், சென்னை விமான நிலையத்தின் எதிரே, எல்.சி., 22 எனும் ரயில்வே கேட்டை கடந்து, திரிசூலம் பகுதிக்கான சாலை செல்கிறது. திரிசூலம் பகுதிவாசிகள், அப்பகுதியில் இயங்கும் கிரஷர்களுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இச்சாலை ஜி.எஸ்.டி., - மடிப்பாக்கத்தை இணைப்பதால், ஒவ்வொரு நாளும் 'பீக் ஹவர்' வேளைகளில், இந்த ரயில்வே கேட் மூடப்படும் போது, சாலையின் இரண்டு பகுதிகளிலும், வாகனங்கள் மணிக்கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்வதற்கு வழியில்லை. ரயில்வே கேட்டை திறந்த பின்னரே செல்ல வேண்டியுள்ளது.
அவசர தேவைக்கு, ஈஸ்வரி நகர் மேம்பாலத்தில் ஏறி, பல கி.மீ., துாரம் ஏறி சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு சுரங்கப்பாதை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பல முறை பேசியுள்ளார். அதனால், அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
திரிசூலம் ரயில்வே கேட், மலையை ஒட்டி உள்ளதால், அடிப்பகுதியில் பாறை இருக்க வாய்ப்பு உள்ளதாலும், சுரங்கப்பாதை அமைக்க, மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடத்தை பெற வேண்டியுள்ளதாலும், அத்திட்டம் கைவிடப்பட்டது.
அதனால், அங்கு மேம்பாலம் அமைப்பது மட்டுமே தீர்வாகும். இது தொடர்பாக, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே அதிகாரிகள், கடந்த வாரம், அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை தயார் செய்யப்பட்ட பின், மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.
பூமிக்கு அடியில் பாறை உள்ளதால், திரிசூலம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க சாத்தியமில்லை என, அதிகாரிகள் கூறிவிட்டனர். அங்கு மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக, அதற்கான அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின் முடிவில், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அங்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- இ.கருணாநிதி,
பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,