ADDED : பிப் 23, 2024 11:56 PM
கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்துக் குமார சுவாமி கல்லுாரியில், விளையாட்டு விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரா.ஆனந்தி தலைமையில் நடந்த விழாவில், குற்றவியல் மற்றும் காவல், நிர்வாக துறை மாணவர்களின் 'புல்வாமா' தாக்குதல் நினைவு அஞ்சலி நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.
அத்துடன், மாணவர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் ஜோதி நிகழ்வும் நடந்தது.
உடற்கல்வி இயக்குனர் பாரதி, சர்வதேச, தேசிய, மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த விபரங்களை விளையாட்டு தின விழாவில் அறிக்கையாக வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக, சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் வி.பி.தனபால் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''கல்வியும், விளையாட்டும் வேறு வேறு கிடையாது. விளையாட்டில் சாதித்தால் நிச்சயம் கல்வியிலும் சாதிக்க முடியும். இவை இரண்டிலும் சாதிக்க வேண்டுமெனில், ஒழுக்கம் மிகவும் முக்கியம். நிச்சயம் அனைவராலும் சாதிக்க முடியும்,'' என்றார்.
அதன்பின், பல்வேறு போட்டிகள் மற்றும் அணிவகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் தனபால் பரிசு வழங்கி பாராட்டினார்.