/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்
/
மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்
UPDATED : ஜூலை 15, 2024 07:02 AM
ADDED : ஜூலை 15, 2024 01:37 AM

சென்னையில், மழைநீர் நிலத்திற்கடியில் இறங்கும் வகையில் கட்டமைப்புகள் மேம்படாததால், மூன்று ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. வடிகால், கால்வாய் அமைத்து மழைநீரை கடலில் சேர்க்க காட்டும் ஆர்வத்தை, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் காட்ட வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில், பல்வேறு காரணங்களுக்காக குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவர்களின் தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பின், 2011ல் ஊரக பகுதிகளில் இருந்த ஏரி, குளங்கள் துார் வாரி சீரமைக்கப்பட்டன.
அதன்படி 2020ல் 210 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டன. இத்துடன், 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டன.
இதனால், சில ஆண்டுகளாக, சென்னை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தது. நிலத்தடி நீரின் அளவை அறிய, ஒவ்வொரு வார்டிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மழைக்கு பின்னரும், இந்த அளவுமானிகள் கொண்டு நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது.
அதன்படி 2021ஐ விட 2022ல், 25 சதவீதம் மழை பொழிவு குறைவாக இருந்தது. இந்த வகையில், 2022ல், தென்மேற்கு பருவமழை, 44 செ.மீ.,யும், 2023ல் 78 செ.மீ.,யும் பெய்தது. அதேபோல், வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ.,யும், 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ.,யும் பெய்தது.
இந்த ஆண்டு கோடையிலும் அவ்வப்போது மழை பெய்தது. இரண்டு மாதங்களாக எதிர்பாராத மழை பெய்கிறது. இதனால், மே மாதத்தைவிட ஜூன் மாதம், நிலத்தடி நீர் மட்டம் பரவலாக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், 2021 உடன் ஒப்பிடுகையில், 2022, 2023, 2024ம் ஆண்டில், ஜூன் மாதங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், கோடம்பாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களைத் தவிர, இதர மண்டலங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.
குறிப்பாக மாதவரம் மண்டலத்தில், 6 அடி வரை குறைந்துள்ளது. அதேபோல், மொத்த மண்டலங்களில், மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு அடியாக குறைந்து வருகிறது.
மழைநீர் நிலத்திற்கடியில் இறங்கும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், வடிகால், கால்வாய்க்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி, குளங்களில் உறை கிணறுகள், மழைநீர் வடிகால் அமைக்காத மணல் பரப்பில், ஜப்பான் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தனியார் இடங்களில் உறை கிணறுகள் அமைக்க, மக்களிடம் ஊக்குவிக்கப்பட்டது.
சில ஆண்டுகளாக, இதை ஊக்குவிக்காமல், மழைநீரை கடலில் கொண்டு சேர்க்கும் வகையில், பலவழிகளில் கட்டமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இருந்தாலும், வெள்ளப் பாதிப்பு குறையவில்லை. அதேசமயம் நிலத்திற்கடியில் மழைநீரும் இறங்கவில்லை.
இதனால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கையால் மட்டுமே, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முடியும்.
அதற்கான வேலைகளில் மாநகராட்சியும், தமிழக அரசும் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு ஈடுபட வேண்டும்
சென்னையில் வடிகால், கால்வாய் கட்டமைப்புகள் அதிகரித்ததால், மண் தரை காண்பதே அரிதாகி விட்டது. இதனால், மழைநீர் நிலத்திற்கடியில் இறங்குவது தடைபட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு செல்கிறது. தனி வீடாக இருந்தால், வீட்டைச் சுற்றி மரங்கள் நட்டு, மண் பரப்பாக பராமரிப்பது அவசியம். மரம் நடும் ஆர்வத்தை போல், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க செய்யும் திட்டங்களில் அரசு ஈடுபட வேண்டும்; மக்களுக்கு உரிய வகையில் பங்களித்தால், பல்வேறு வகைகளில் பயன் அளிக்கும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
விழிப்புணர்வு இல்லை
பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், நீரில் உப்பு தன்மை அதிகரித்து உள்ளது. சென்னையில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் வடிகால், கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. எதிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவில்லை. குளம், ஏரி, வடிகால், கால்வாய்க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும். குறுக்கு தெருக்களின் மைய பகுதியில் உறை கிணறு அமைக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்.
- நீர்நிலை ஆர்வலர்கள்
- -நமது நிருபர் -