/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதிய உணவு திட்ட முட்டை வினியோகத்தில் தில்லுமுல்லு! :வில்லிவாக்கத்தில் தினமும் 2,000 'ஸ்வாகா'
/
மதிய உணவு திட்ட முட்டை வினியோகத்தில் தில்லுமுல்லு! :வில்லிவாக்கத்தில் தினமும் 2,000 'ஸ்வாகா'
மதிய உணவு திட்ட முட்டை வினியோகத்தில் தில்லுமுல்லு! :வில்லிவாக்கத்தில் தினமும் 2,000 'ஸ்வாகா'
மதிய உணவு திட்ட முட்டை வினியோகத்தில் தில்லுமுல்லு! :வில்லிவாக்கத்தில் தினமும் 2,000 'ஸ்வாகா'
UPDATED : செப் 23, 2025 12:54 AM
ADDED : செப் 23, 2025 12:52 AM

- நமது நிருபர் -
மதிய உணவு திட்டத்தின் கீழ், அரசு பள்ளியில் மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் முட்டை வினியோகத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடசென்னையில், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் மட்டும், தினமும் 2,000 முட்டைகள் குறைவாக அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 24,388 தொடக்கப் பள்ளிகள் உட்பட, 37,553 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் நலன் கருதி, அரசு தரப்பில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, தினசரி மாணவர்களுக்கு சூடான உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
சர்ச்சை பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், மதிய உணவு திட்டத்திற்கு அரசு முக்கியத்தும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும், பல்வேறு பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முட்டை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னை வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பத்துார், வீராபுரம், போரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியரின் எண்ணிக்கைக்கு குறைவாக மதிய உணவிற்கு முட்டை வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அம்பத்துார், வீராபுரம் மற்றும் போரூர் பகுதியில் உள்ள 103 பள்ளியில் படிக்கும், 13,688 மாணவர்களுக்கு, கடந்த மாதம் முதல் வார நிலவரப்படி, 11,653 முட்டை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தினமும், 2,035 முட்டை குறைத்து வழங்கப்படுகிறது. இதன்படி மாதம் தோறும் இந்த ஒன்றியத்தில் மட்டும், 45,000 முட்டை வரை குறைவாக வழங்கப்படுகிறது.
அயப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 405 மாணவர்களில் 200 பேருக்கு மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது. வேலப்பன்சாவடி உயர்நிலைப் பள்ளியில், 250க்கு 200; போரூர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், 150க்கு 100 முட்டை மட்டுமே வழங்கப்படுகிறது.
இவ்வாறு குறைவாக முட்டை வழங்குவதால், யாருக்கு கொடுப்பது என தெரியாமல் சத்துணவு பணியாளர்கள் விழிபிதுங்குகின்றனர். மாணவர்களும், முட்டைக்கு முட்டி மோதும் நிலை உள்ளது.
இதுகுறித்து, சத்துணவு பணியாளர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு இவ்வளவு முட்டைதான் தர முடியும். இதை வைத்து சமாளியுங்கள் என, அதிகாரிகள் கூறுகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்' என்றனர்.
வில்லிவாக்கம் ஒன்றியத்தில் மட்டும் இந்த நிலை என்றால், சென்னை முழுதும், தமிழகம் முழுதும் எவ்வளவு முட்டைகள் குறைவாக வழங்கப்படும் என கணக்கிட்டால் தலை சுற்றிவிடும்.
காலை உணவு திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், மதிய உணவு திட்டத்தில் அரசு சற்று கவனம் செலுத்தாமல் உள்ளது. அதனால் முட்டை வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்து உணவுப் பொருட்களின் அளவு, சமையலுக்கான செலவு தொகையும் குறைக்கப்படுமோ என, சத்துணவு அமைப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வலியுறுத்தல் மேலும், இப்பள்ளிகளில் சமையல் உதவியாளர், அமைப்பாளர்கள் தட்டுப்பாடு இருப்பதால், இப்பகுதியில் செயல்படும் 103 பள்ளிகளில், பல இடங்களில் ஒரே அமைப்பாளர் ஐந்து முதல் ஏழு பள்ளிகளை நிர்வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னையில், மாவட்ட கலெக்டர், வில்லிவாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய ஆய்வு நடத்தி, மாணவர்கள் அனைவருக்கும் சத்துணவு முட்டை சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு உண்ணும் மாணவர்களுக்கும், 'எமிஎஸ்' எண் பதிவு பெற்றுள்ள மாணவர்களுக்கும், மதிய உணவு திட்டத்தின் கீழ், முட்டை உடன் கூடிய சத்துணவு உரிய அளவில் வழங்கப்படுகிறது.
அமைப்பாளரின் ஒப்புதலுடன், அவர்கள் கேட்கும் அளவில், பொருட்களை வழங்கி வருகிறோம். ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உரிய விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.