/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முருகனை காண' அதிகாலை வந்த ஒற்றை காட்டு யானை
/
'முருகனை காண' அதிகாலை வந்த ஒற்றை காட்டு யானை
ADDED : ஆக 01, 2024 01:51 AM

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், அதிகாலையில், ஒற்றை காட்டு யானை விசிட் அடித்ததால், சற்று நேரம் பதற்றம் நிலவியது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், அடிவாரத்தில் இருந்து 2.4 கி.மீ., தொலைவில், மலை மேல் உள்ளது. கோவை வனச்சரகத்திற்குட்பட்ட இப்பகுதியில், காட்டு யானை, சிறுத்தை, மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மருதமலை கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை மற்றும் படிக்கட்டுப்பாதையில், அடிக்கடி காட்டு யானை கடந்து செல்லும்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, சுமார் 6:00 மணியளவில், மருதமலை மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு, ஒற்றை காட்டு யானை வந்தது.
அங்கிருந்து, புதியதாக 'லிப்ட்' கட்டப்படும் பகுதியை ஒட்டியுள்ள மண்ரோட்டில் ஏறி, கோவில் வளாகத்தில் உள்ள கோசாலை வரை சென்றது.
இதனைக்கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டதால், காட்டு யானை தும்பிக்கையை தூக்கியபடி, வந்த வழியிலேயே திரும்பி சென்றது. மலைப்பாதையில் மேல் இருந்து கீழிறங்கும்போது, இரு கார்கள் மேலே வந்துள்ளன.
அப்போதும், காட்டு யானை, அவர்களை எதும் செய்யாமல், இடும்பன் கோவில் அருகே, வனப்பகுதிக்குள் இறங்கி சென்றது. அதிகாலையில், ஒற்றைக்காட்டு யானை, திடீரென விசிட் அடித்ததால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது.