ADDED : ஆக 01, 2024 01:52 AM

கோவை : எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும், வாராந்திர சிறப்பு ரயிலுக்கு நேற்று போத்தனூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எர்ணாகுளத்திலிருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு, வாரம் மூன்று முறை வந்தே பாரத் ரயில் நேற்று முதல், 25ம் தேதி வரையும், மறுமார்க்கத்தில், பெங்களூருவிலிருந்து எர்ணாகுளத்திற்கு இன்று முதல் 26ம் தேதி வரையும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதன்படி, நேற்று மதியம் எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட ரயில் (எண்: 06001) திருச்சூர், சொரனூர் பி, பாலக்காடு வழியே, 15 நிமிடங்கள் முன்பாக மாலை 4:00 மணியளவில் போத்தனூரை வந்தடைந்தது.
அங்கு ரயில் பயனாளர் சங்கத்தின் மணிலால் காந்தி, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்க நிர்வாகி சாமினாதன், மாசு தடுப்பு கூட்டு குழு செயலாளர் மோகன் உள்ளிட்டோர், லோகோ பைலட்களுக்கு கதராடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, 15 நிமிடங்களுக்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.
ரயிலின் இயக்கத்தை, சேலம் கோட்ட முதன்மை கட்டுப்பாட்டாளர் ரமேஷ் கண்காணித்தார்.