/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீருக்கான தென்னங்கன்றுகள் விற்பனை ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்
/
இளநீருக்கான தென்னங்கன்றுகள் விற்பனை ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்
இளநீருக்கான தென்னங்கன்றுகள் விற்பனை ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்
இளநீருக்கான தென்னங்கன்றுகள் விற்பனை ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
ஆனைமலை;'ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், இளநீருக்கான தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது,' என ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
தோட்டக்கலை பயிரான தென்னை வேரினில் நீர் உறிஞ்சி, உச்சியில் சுவையான இளநீர் தரும் சிறப்பு வாய்ந்த அதிசய மரமாகும். இது உணவாகவும், சிறந்த பானமாகவும், மருந்தாகவும் பயன் அளிக்கிறது.
குட்டை ரக தேங்காயின் காய்ந்த பருப்பு (கொப்பரை) போன்று வழுக்கும் தன்மை உடையதால், எண்ணெய் ஆட்ட பெரும்பாலும் உபயோகப்படுத்துவதில்லை.
இந்த குட்டை ரகங்கள், இளநீருக்காக அதிகளவில் உபயோகப்படுத்துவதால், இது இளநீர் ரகங்கள் என அழைக்கப்படுகிறது.
இவற்றின் ஓலை மட்டைகளும், தேங்காயின் நிறமும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களுடன்காணப்படுவதால், இது அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியின் காரணமாக, இளநீர் ரகங்களை பயிர் செய்ய வேண்டிய சூழல் உருவாகி வருகின்றது.
மேலும், இளநீரில் புரதங்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியன உள்ளன.
இளநீரின் முதன்மை சத்தான பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், நீரிழப்பு மற்றும் மன அழுத்தத்தை தடுக்க உதவுகின்றது. இத்தகைய சிறப்பியல்புகளை கொண்ட இளநீரை கொடுக்கும் ரகங்களை பயிரிடுவது அவசியமாகும்.
குட்டை இனத்தை சேர்ந்த ரகங்கள், குறைந்த உயரம் வளரக்கூடியவை; தண்டுப்பகுதி மெல்லியதாகவும், கொண்டைப்பகுதி சிறியதாகவும் இருக்கும். நடவு செய்த, மூன்று ஆண்டுகளில் காய்க்கத்துவங்கும்; 25 - 35 ஆண்டுகள் வரை பயன்தரக்கூடியது.
உருண்டையாக பல வண்ணங்களில் உள்ளதால், வீடுகளின் முன்புறத்தில் அழகுக்காகவும், இளநீருக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த குட்டை ரகங்களை தோப்பாக பயிரிடும் போது மரம் ஒன்றுக்கு, 150 - 200 இளநீர் வரை ஒரு ஆண்டுக்கு கிடைக்கும்.
முக்கிய குட்டை ரகங்களான சவுகாட் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை, கங்கபாண்டம் பச்சை குட்டை, மலேசியன் ஆரஞ்சு குட்டை, மஞ்சள் குட்டை ஆகியவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாய் மரங்களில் இருந்து, இளநீர் ரக கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், நெட்டை ரகங்களும் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனைக்கு உள்ளன.தேவைப்படும் விவசாயிகள், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது, 94431 53880, 04253 288722 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இத்தகவலை, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.