/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோட்டீஸ் கொடுத்தது 26; 'சீல்' வைத்தது 9 கடைகள்! நகராட்சி அதிகாரிகள் பாரபட்ச நடவடிக்கை
/
நோட்டீஸ் கொடுத்தது 26; 'சீல்' வைத்தது 9 கடைகள்! நகராட்சி அதிகாரிகள் பாரபட்ச நடவடிக்கை
நோட்டீஸ் கொடுத்தது 26; 'சீல்' வைத்தது 9 கடைகள்! நகராட்சி அதிகாரிகள் பாரபட்ச நடவடிக்கை
நோட்டீஸ் கொடுத்தது 26; 'சீல்' வைத்தது 9 கடைகள்! நகராட்சி அதிகாரிகள் பாரபட்ச நடவடிக்கை
ADDED : ஜூலை 11, 2024 10:23 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், 26 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில், நேற்று 'சீல்' வைக்க நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம், ஒன்பது கடைகளுக்கு மட்டுமே 'சீல்' வைத்ததால், பாதிக்கப்பட்டோர் அதிருப்தியடைந்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், நகராட்சி அனுமதிக்கு மாறாகவும்; அனுமதியின்றியும் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னார்வலர் கிருஷ்ணகுமார் மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த, 2019ல் நீதிமன்ற அவதிப்பு வழக்கும், 2019ல் மனுவும், 2021ல் நீதிமன்ற அவமதிப்பு குறித்து மற்றொரு வழக்கும் தொடர்ந்தார்.
கடந்த, 2021ல் ஐகோர்ட் குழு ஆய்வு செய்து, நீதிபதிக்கு அறிக்கை அளித்தது. அதில், சில கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. கோர்ட் உத்தரவுப்படி மொத்தம், 66 கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 40 கடை உரிமையாளர்கள் இடைக்கால தடை பெற்றதாக தெரிகிறது. மீதமுள்ள, 26 கடைகளுக்கு 'சீல்' வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில், நகராட்சி நிர்வாகம், 26 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், நேற்று கடைகளுக்கு 'சீல்' வைக்க வந்த போது, வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மகாலிங்கபுரம் ஆர்ச் முன் திரண்டனர்.
டி.எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், ஸ்ரீநிதி, நமச்சிவாயம், இளமுருகன் மற்றும், எட்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட, 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
'சீல்' வைக்க விடாமல் தடுப்பவர்களை கைது செய்ய வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மகாலிங்கபுரம் ஆர்ச் வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
நகராட்சி கமிஷனர் (பொ) செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் சாந்தி நிர்மலாபாய், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோரிடம், கடை உரிமையாளர்கள் பேச்சு நடத்தினர். அப்போது, சிலர், 'நகராட்சியில் பல கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த, 66 கடைகளில் மட்டும் தான் விதிமீறல் உள்ளதா. எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்,' என்றனர். பேச்சு நடத்திய அதிகாரிகள், கோர்ட் உத்தரவை செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தனர்.
இதையடுத்து, காலை, 9:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, மதியம், 1:00 மணி வரை நீடித்தது. அதன்பின், ஒரு வழியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆயத்தமானார்கள்.
களேபரம்
போலீஸ் பாதுகாப்புடன், பேக்கரி செயல்பட்டு, தற்போது காலியாக இருந்த கடைக்கு சீல் வைக்க முற்பட்டனர். அங்கு இருந்த கடை உரிமையாளர்கள் வெளியேறாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார், அவர்களை வெளியேற்றி 'சீல்' வைக்கும் போது, கடை உரிமையாளர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு இடையே அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அதன்பின், துணிக்கடைக்கு சீல் வைத்தனர்.
சலுான் கடைக்கு அதிகாரிகள் சென்றதும், கடை உரிமையாளர்கள், 'கடைக்கு 'சீல்' வச்சீங்கன்னா; எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தயவு செய்து சீல் வைக்காதீங்க,' என கண்ணீர் விட்டனர். இதனால், அந்த கடைக்கு 'சீல்' வைக்காமல், அடுத்த கடைக்கு சென்ற அதிகாரிகள், மூன்று கோழிக்கடைகளில், உரிமையாளர் காட்டிய கடைக்கு மட்டுமே 'சீல்' வைத்தனர்.
கடைக்காரர்கள் மோதல்
அதன்பின், வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் ஒரு கடைக்கு மட்டுமே 'சீல்' வைக்க முற்பட்ட போது, அங்கு இருந்த துணிக்கடை உரிமையாளர், 'மொபைல் கடைக்கு சீல் வையுங்க, அல்லது மேலே உள்ள கடைக்கு சீல் வையுங்க, எனது கடைக்கு சீல் வைக்காதீங்க என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, மொபைல் கடை உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், உடனடியாக மூன்று கடைகளுக்கும் சீல் வைத்து, ஐஸ்கிரீம் கடைக்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
அங்கு, பூட்டியிருந்த ஒரு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மற்றொரு வணிக வளாகத்தில் ஒரு கடைக்கு சீல் வைத்தனர். மொத்தம், ஒன்பது கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், நடவடிக்கையை முடித்து கொண்டு, அதிகாரிகளும், போலீசாரும் கலைந்து சென்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோர்ட் உத்தரவுப்படி முதல்கட்டமாக ஒன்பது கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும். இன்று கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது,' என்றனர்.