1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி - ஆழியாறு ரோட்டில், தெப்பக்குளம் அருகே பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்ட போது, அதில், 50 கிலோ எடை கொண்ட, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த விஜயபிரசாத்,23, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொாழிலாளர்களுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 1,100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கம்பிவலையில் மின்சாரம்; வாலிபர் பலி
பொள்ளாச்சி, ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன்,65. இவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இவரது மகன் தமிழரசன், தோப்பில் உள்ள கோழி பண்ணையில் கோழி திருடு போகாமல் இருக்க, கிணறு மின் இணைப்பில் இருந்து சட்ட விரோதமாக, 100 மீட்டர் தொலைவுக்கு மின்சாரம் கொண்டு வந்து கம்பிவலையில் மின் இணைப்பு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தோப்பை குத்தகைக்கு எடுத்துள்ள முருகவேல், இளநீர் பறிக்க பருத்தியூரை சேர்ந்த அருண்குமார்,24, என்பவரை அழைத்து வந்தார். அருண்குமார், குடிதண்ணீர் பாட்டில் எடுத்த போது, எதிர்பாராதவிதமாக கம்பிவலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆழியாறு போலீசார், இளங்கோவனை கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள தமிழரசனை தேடி வருகின்றனர்.
வாகன விபத்தில் இருவர் காயம்
கிணத்துக்கடவு, சோழனூரை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், 38 மற்றும் மாசாணி, 50. இருவரும் பைக்கில், கோவில்பாளையம் சேரன்நகர் பகுதியில் 'யூ டர்ன்' பகுதியில் திரும்பும் போது, கோவையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், கிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பைக்கில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், மாசாணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.