/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
/
டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 01, 2024 03:25 AM

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக, 28ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மயானுார், முக்கொம்பு அணை வழியாக நேற்று அதிகாலை கல்லணைக்கு வந்தது.
இதையடுத்து, நேற்று கல்லணையில் உள்ள காவிரி அன்னை, அகத்தியர், கரிகாலச்சோழன், சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் மற்றும் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மங்கல வாத்தியம் முழங்க அமைச்சர்கள் நேரு, மகேஷ், ராஜா, மெய்யநாதன், எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று, பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகளில் மலர்கள் துாவி விவசாயம் செழிக்க வேண்டியபடி தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதன்படி, முதல் கட்டமாக காவிரியில் 1,500 கன அடி, வெண்ணாறு 1,000 கன அடி, கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 400 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டன.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தளாடியில், 12 லட்சம் ஏக்கர் அளவுக்கு பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம்
பிறகு அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடக முதல்வர் அவரது விருப்பத்தை கூறுகிறார். மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் விடமாட்டோம். கர்நாடகாவில், எவ்வளவு தண்ணீர் வந்தாலும், நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை நிறுத்தி விட்டு, கடலில் தான் விடுகின்றனர்.
காவிரியில் நம் உரிமையை கேட்கிறோம். அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டார். மத்திய அரசும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கவில்லை என கூறியுள்ளது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீரானது குறுவை சாகுபடிக்கும், சம்பாவுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
தண்ணீரை எல்லா ஆறுகள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் ஒரு நாளும் அணையில் இருந்து திறப்பது நிறுத்தப்படாது. விவசாயிகளுக்கு பயிர்கடன் தேவையான அளவு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரிடம் ஆவேசம்
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீரை திறக்க வேண்டும். பல இடங்களில் கட்டுமான பணிகள் நடப்பதால் தண்ணீரை குறைத்து திறந்து விடுகின்றனர்.
இப்போது தான் கல்லணையில் கூட பல பணிகளை செய்கின்றனர் என ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.