/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிஜிட்டல்' முறையில் சந்தையை அணுக 'பிளான்': இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு
/
'டிஜிட்டல்' முறையில் சந்தையை அணுக 'பிளான்': இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு
'டிஜிட்டல்' முறையில் சந்தையை அணுக 'பிளான்': இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு
'டிஜிட்டல்' முறையில் சந்தையை அணுக 'பிளான்': இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு
ADDED : ஜூன் 28, 2024 07:32 AM

கோவை: கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' அணுகுமுறை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' அணுகுமுறையை கையாள்வதற்கு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) கோவை மண்டலம் சார்பில், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இணைத்து ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் தலைவராக, சி.ஐ.ஐ., முன்னாள் தலைவரும், ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செந்தில் கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்ட செயலாக்கம் தொடர்பாக, இந்திய தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தினருக்கு விளக்கும் அறிமுக கூட்டம், சி.ஐ.ஐ., அலுவலகத்தில் நடத்தப்பட்டது; இந்திய தொழில்கள் கூட்டமைப்பு கோவை மண்டல சேர்மன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் பிரசாந்த், கல்விக்குழு கன்வீனர் சதாசிவம், இணை கன்வீனர் பீனா, கல்விக்குழு அக்சய் தங்கவேலு, ஜி.ஆர்.ஜி., பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொழில் நிறுவனங்கள் - கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள அமைப்பின் தலைவரான செந்தில் கணேஷ் கூறியதாவது:
புதிதாக துவக்கியுள்ள அமைப்பு மூலமாக, 10 குழுக்கள் உருவாக்கப்படும். அதில், தொழில் நிறுவனங்களுடன், இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்பர். ஒவ்வொரு குழுவிலும் தலா, 6 பேர் இடம் பெற்றிருப்பர். அதாவது, இரண்டு பேர் ஒரு கம்பெனியில் இருந்தும், ஒரு இன்ஜினியரிங் மாணவர், ஒரு வணிகவியல் சார்ந்த மாணவர், சைக்காலஜி சார்ந்த ஒரு மாணவர், ஒரு பேராசிரியர் இருப்பர். தலா, 6 பேர் வீதம், 10 குழுக்களுக்கு, 60 பேர் இருப்பர்.
ஜூலை, 12 முதல் வாரம் ஒருமுறை வகுப்பு துவக்கப்படும். துறை ரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்கள் வகுப்பு நடத்துவர். 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' அணுகுமுறை, குழுவில் இடம் பெற்றுள்ள நிறுவனத்தில் செயல்படுத்தப்படும்.
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள நடைமுறையால், மாணவர்கள், பேராசிரியர்கள் பயன்பெறுவர்; தொழில்நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறை கிடைக்கும். இதேபோல், நிறைய திட்டங்கள் செயல்படுத்த இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.