/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கொள்முதலில் ரூ.150 கோடி நிலுவை ! தென்னை விவசாயிகள் அதிருப்தி
/
கொப்பரை கொள்முதலில் ரூ.150 கோடி நிலுவை ! தென்னை விவசாயிகள் அதிருப்தி
கொப்பரை கொள்முதலில் ரூ.150 கோடி நிலுவை ! தென்னை விவசாயிகள் அதிருப்தி
கொப்பரை கொள்முதலில் ரூ.150 கோடி நிலுவை ! தென்னை விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 09, 2024 05:50 PM
பொள்ளாச்சி:
கொப்பரை கொள்முதல் செய்ததற்கான நிலுவை தொகை வழங்காதால், தென்னை விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'நாபிட்' நிறுவனம், பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், ஆதார விலை திட்டத்தின் கீழ், 90,300 மெட்ரிக் டன் கொப்பரை (88,300 மெட்ரிக் டன் கொப்பரை, 2,000 மெட்ரிக் டன் பால் கொப்பரை) கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தில், அரவை கொப்பரை கிலோ, 111.60 ரூபாய்க்கு ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 26 மாவட்டங்களில் உள்ள, 75 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில், 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 31,500 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, தமிழகத்தில் மார்ச் மாதம் துவங்கப்பட்ட கொப்பரை கொள்முதல், ஜூன் மாதம், 10ம் தேதி வரை நடந்தது. ஆனால், விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக பணம் பட்டுவாடா செய்யாததால், அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்மைப்பு இணை செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:
தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கொப்பரைக்கு, 172 கோடி தொகை முழுவதுமாக விடுவிப்பு செய்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'நாபிட்' நிறுவனம் வழங்கினால் உடனடியாக விவசாயிகளுக்கு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், 45 நாட்களாகியும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஏற்கனவே தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரசு கொள்முதல் செய்த பணமும் குறிப்பிட்ட நேரத்துக்கு கிடைக்காததால் சிரமமாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் மட்டும், 73.74 கோடி ரூபாய், 4,711 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
நிலுவை எவ்வளவு
தமிழகத்தில், 'நாபிட்' வாயிலாக, 172 கோடி ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக மூன்று மாதங்களில், 11,580 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கு, 55.54 கோடி ரூபாய் பணம் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
தற்போது, மீதம் உள்ள, 4,711 விவசாயிகளுக்கு, 60 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.