/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுஅடிமையான கணவரால் மனைவி, குழந்தைகள் கொலை போலீஸ் மறைப்பது ஏன்
/
மதுஅடிமையான கணவரால் மனைவி, குழந்தைகள் கொலை போலீஸ் மறைப்பது ஏன்
மதுஅடிமையான கணவரால் மனைவி, குழந்தைகள் கொலை போலீஸ் மறைப்பது ஏன்
மதுஅடிமையான கணவரால் மனைவி, குழந்தைகள் கொலை போலீஸ் மறைப்பது ஏன்
ADDED : ஜூலை 09, 2024 08:10 PM

கோவை:கோவையில் இரு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டதாக, கணவரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையில் முழு தகவல்கள் இடம்பெறாதது, சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
கோவை, ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியை சேர்ந்த பெயின்டர் தங்கராஜ், 40. மனைவி பிரிந்து சென்று விட, இரண்டாவதாக புஷ்பா, 38, என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஹரிணி, 9, ஷிவானி, 3, என இரு பெண் குழந்தைகள். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தங்கராஜ் தினமும் போதையில், புஷ்பாவிடம் சண்டையிட்டு வந்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வேலைக்கு சென்று வந்த புஷ்பாவிடம், மது குடிக்க தினமும் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். கடந்த, 7ம் தேதி இரவும் சண்டையிட்டார். மறுநாள் காலை புஷ்பா மற்றும் இரு குழந்தைகள், வீட்டு வளாகத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில், சடலமாக மீட்கப்பட்டனர். மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
போலீசாரின் டி.எஸ்.ஆர்., அறிக்கையில், நெசவாளர் காலனி கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்தரிடம் சரணடைந்த தங்கராஜ், முதல் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளியதாகவும், குழந்தையை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய புஷ்பாவை, இரண்டாவது குழந்தையுடன் சேர்த்து தள்ளி, தொட்டியின் மூடியை மூடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், முதல் தகவல் அறிக்கையில், இதுகுறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. இது, பல விதங்களில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
கஞ்சா போதையில் கொலையா?
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தங்கராஜிற்கு கஞ்சா பழக்கமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்னை, ஏற்கனவே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், கஞ்சா புழக்கம் மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதால், போலீசார் மூடி மறைக்கின்றனரோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.