/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவி
/
காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவி
ADDED : ஜூலை 16, 2024 02:21 AM

வடவள்ளி;சோமையம்பாளையத்தில், காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று, உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய, மனைவி மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு,42. இவருக்கு லாவண்யா,33 என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பிரபு, சொந்தமாக லேத் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
அதில், நஷ்டம் ஏற்பட்டதால், கவுண்டம்பாளையத்தில் உள்ள லேத் ஒர்க் ஷாப்பில் வேலைக்கு சென்று வந்தார். லாவண்யா, கே.என்.ஜி.புதூரில், டீக்கடை வைத்துள்ளார்.
கடந்த, 10 நாட்களாக பிரபு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் கடந்த, 13ம் தேதி, பிரபு உடல் அசைவற்று இருப்பதாக, மனைவி லாவண்யா, பிரபுவின் தாய் கலாவதிக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் உதவியுடன் அருகில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, தாயார் கலாவதி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார், லாவண்யா, தனது காதலனுடன் சேர்ந்து பிரபுவை கொன்றதை கண்டுபிடித்தனர். லாவண்யா, அவரது காதலன் பைரேகவுடா ஆகிய இருவரையும், கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், லாவண்யா நடத்தி வந்த, டீக்கடையில் வைத்து, தனியார் நிறுவன டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த பைரேகவுடா,39 வுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதற்காக, பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு, 15 நாட்களுக்கு முன், எலி பேஸ்டை சாம்பாரில் கலந்து, பிரபுவிற்கு லாவண்யா கொடுத்துள்ளார்.
அதில், பிரபு உயிரிழக்கவில்லை. இதன் காரணமாகவே, பிரபுவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி, பகல் 12:30 மணிக்கு, வீட்டில் பிரபு மட்டும் தனியாக இருப்பதாக, காதலன் பைரே கவுடாவிற்கு, லாவண்யா தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபுவின் வீட்டிற்கு சென்ற பைரேகவுடா, தூங்கிக்கொண்டிருந்த பிரபுவை, காட்டன் துண்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். வீட்டிற்கு திரும்பிய லாவண்யா, உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளிலும், பைரேகவுடா வந்து சென்றது பதிவாகியுள்ளது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்' என்றனர்.