/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான பயணியிடம் தோட்டா; கோவை போலீசார் விசாரணை
/
விமான பயணியிடம் தோட்டா; கோவை போலீசார் விசாரணை
ADDED : மே 27, 2025 10:48 PM

கோவை: அனுமதியின்றி விமானத்தில் தோட்டா எடுத்துச் செல்ல முயன்ற, மத்திய பாதுகாப்பு படை வீரரிடம், கோவை போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர், கன்னியார்க்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார், 25; மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) டேராடூனில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக, சொந்த ஊரான திருச்சூருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து டேராடூன் திரும்பிச் செல்ல, நேற்று காலை கோவை விமான நிலையம் வந்தார்.
அவரது உடமைகளை ஊழியர்கள் பரிசோதித்தபோது, பேக்கில் ஒரு தோட்டா இருந்ததை கண்டுபிடித்தனர். அனுமதி பெறாமல் தோட்டா கொண்டு செல்ல முயன்றதாக, பீளமேடு போலீசாருக்கு விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். பிரதீப்குமாரிடம் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'மத்திய பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி, தோட்டாக்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு ஒரு முறை, கணக்கு காண்பிக்க வேண்டும். அதுவரை தோட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பிரதீப்குமாரிடம் கைப்பற்றப்பட்ட தோட்டா குறித்து, பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.