ADDED : மே 26, 2025 11:13 PM
சூலுார், ; பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மதுரம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:
எங்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர், கடந்த, 2013 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நேர்காணல் செய்யப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தக துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் பெயர்கள், நீக்கப்பட்டதால், வேறு அரசு பணிக்கு சேர முடியாத நிலை உள்ளது. இந்த பணியினை நம்பி வந்த பணியாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்த பணியாளர்கள், 60 முதல் 80 கி.மீ., தூரம் பயணித்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அதனால், பொது கலந்தாய்வு நடத்தி, பணியாளர்களுக்கு ஏற்றவாறு பணி மாறுதல் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.