/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பு இல்லாத பரிசல் பயணம்
/
பாதுகாப்பு இல்லாத பரிசல் பயணம்
ADDED : அக் 14, 2025 09:30 PM

மேட்டுப்பாளையம்; காந்தையாற்றில், 30 அடிக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாத பரிசலில் பயணம் செய்கின்றனர். எனவே மோட்டார் படகை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்ட தமிழக அரசு, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடிக்கடி காந்தையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் மட்டம் உயரும் போது, பாலம் கட்டும் பணிகள் தடைபடுகின்றன.
தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 97 அடியாக உள்ளது. அணையின் தேக்க தண்ணீர் காந்தையாற்றில், 30 அடிக்கு தேங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் ஆற்றை பரிசலில் கடந்து செல்கின்ற னர். கடந்த சில மாதங்கள் முன், ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்த போது, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்களை மோட்டார் படகில் இலவசமாக ஏற்றிச் சென்று வந்தது. ஆனால் தற்போது காலை மாலையில், பள்ளி குழந்தைகள் மட்டும் செல்லும் வகையில், மோட்டார் படகு இயக்கப்படுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் பொதுமக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: காலை, மாலை மாணவர்களுக்கு மட்டும் இயக்கப்படும் மோட்டார் படகை, பொதுமக்கள் பயன் பெறும் வகையில், நாள் முழுவதும் இயக்க, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தண்ணீரில் யானைகள் நீந்தி வருகின்றன. கடந்த வாரம் தண்ணீரில் நீந்தி வந்த யானை, சாலையின் ஓரத்தில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்களை கீழே தள்ளி உள்ளது. இதனால் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பரிசல் பயணம் என்பது பாதுகாப்பு இல்லாத நிலையாக உள்ளது. எனவே சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், மோட்டார் படகை பொதுமக்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

