/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னை ரயில்வே பெண் ஊழியர் கொலை வழக்கு; தலைமறைவான பெண்ணாடம் வாலிபர் கைது
/
சென்னை ரயில்வே பெண் ஊழியர் கொலை வழக்கு; தலைமறைவான பெண்ணாடம் வாலிபர் கைது
சென்னை ரயில்வே பெண் ஊழியர் கொலை வழக்கு; தலைமறைவான பெண்ணாடம் வாலிபர் கைது
சென்னை ரயில்வே பெண் ஊழியர் கொலை வழக்கு; தலைமறைவான பெண்ணாடம் வாலிபர் கைது
ADDED : ஜூலை 23, 2024 02:38 AM

விருத்தாசலம் : கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவரை 4 ஆண்டிற்கு பின் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியை சேர்ந்தவர் கோபால் மகன் வீரா (எ) வீராசாமி,32; சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கேன்டீனில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். அப்போது, அங்கு துாய்மை பணியாளராக பணிபுரிந்த ருக்கேஷ் மனைவி மோகனாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2019ல், வேப்பேரியில் உள்ள லாட்ஜில் இருவரும் ஒன்றாக இருந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வீராசாமி தாக்கியதில், மோகனா இறந்தார். பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, வீராசாமியை கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த வீராசாமி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இது தொடர்பாக 2020ம் ஆண்டில் கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் விருத்தாசலம் அடுத்த முருகன்குடியில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு வந்த வீராசாமியை, குற்ற நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராஜசேகர், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், வழக்கு விசாரணைக்கு பயந்து ஈரோடு மற்றும் பெரியகுளம் பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று விருத்தாசலத்திற்கு வந்த பெரியமேடு சப் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசாரிடம், வீராசாமியை ஒப்படைத்தனர்.