/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கா ங்., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் தம்பட்டம்
/
கா ங்., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் தம்பட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:17 PM

விருத்தாசலம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மணவாளநல்லுார் பகுதியில் உள்ள மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என, சட்டசபையில் பேசி இருந்தார்.
அதைத்தொடர்ந்து, ரூ.25.20 கோடி மதிப்பில் மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், சட்டசபை தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,க்களிடம் அரசு சார்பில் கேட்கப்பட்டது.
அப்போது, மணிமுக்தாற்றில் சேதமடைந்துள்ள படித்துறையை சீரமைக்க வேண்டுமென ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில், 400 மீட்டர் துாரம் சேதமடைந்துள்ள படித்துறையில், 100 மீட்டர் துாரம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான 4 திட்டங்களை, எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் பெற்று தந்ததாக கூறி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கடைவீதி, பாலக்கரை, பஸ் நிலையம், பெரியார் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், அவரது ஆதரவாளர்கள் விளம்பர பேனர் வைத்துள்ளனர்.
இந்த பேனரில், காங்., எம்.பி., மற்றும் நகராட்சி சேர்மன் போட்டோக்கள் இல்லாததும், நகராட்சி பெற்ற வேலையையும் சேர்த்து, எம்.எல்.ஏ., செய்ததாக இருப்பது, விருதை தி.மு.க., வினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே மணிமுக்தாற்றில் சேதமடைந்துள்ள 300 மீட்டர் படித்துறையை சீரமைக்க நகராட்சி சார்பில், கடந்த 2022ம் ஆண்டு அரசிடம் நிதி கேட்டு கோப்பு தயாரிக்கப்பட்டு, தற்போது ரூ.4.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், நகராட்சி நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம், மூன்று தளங்களுடன் வணிகவளாகம் கட்ட ரூ.5 கோடி நிதி கேட்டு, அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், முதலில் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது. அதற்கான கோப்புகள் தற்போது பரிந்துரையில் உள்ளது.
இந்நிலையில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., படித்துறை சீரமைக்க ரூ.4 கோடி மற்றும் நகராட்சி பகுதியில் வணிகவளாகம் கட்ட நிதி பெற்று தந்துவிட்டதாக பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காங்., எம்.எல்.ஏ., சுய விளம்பர மோகம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், காங்., எம்.பி., மற்றும் நகராட்சி சேர்மன் போட்டோக்கள் இல்லாமல் பேனர் வைத்துள்ளார் என, தெரிவித்தனர்.