/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 84 சதவீத பஸ்கள் இயக்கம்
/
மாவட்டத்தில் 84 சதவீத பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 10, 2024 01:35 AM

கடலுார் :  கடலுார் மாவட்டத்தில், 84 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி தொ.மு.ச., காங்., தொழிற்சங்கத்தினர் ஆதரவுடன், பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
போராட்டம் நேற்று காலை துவங்கிய நிலையில், நேற்று காலை அண்ணா தொழிசங்கம், சி.ஐ.டி.யு., பாட்டாளி தொழிற்சங்கத்தினர் கடலுார் பணிமனையில் பஸ்கள் வெளியில் செல்லமுடியாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் வெளியில் எடுத்து செல்லப்பட்டதால், போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வடலுார், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பனிமனைகளில் தற்காலிக பணியாளர்களை வைத்து அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கு போராட்டக்காரர்கள் தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 11 பனிமனைகளில் மொத்தம் 552 பஸ்கள் உள்ளன. கடலுார் 93, பண்ருட்டி 42, சிதம்பரம் 89, காட்டுமன்னார்கோவில் 25, வடலுார் 37, நெய்வேலி 29, விருத்தாசலம் 84, திட்டக்குடியில் 37 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பகல் நேரத்தில் இயக்கப்பட வேண்டிய 521 பஸ்களில், 84 சதவீதம் 436 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பஸ்களை இயக்க 1050 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர் என, அரசு போக்குவரத்துக்கழக கடலுார் மண்டல பொதுமேலாளர் ராஜா தெரிவித்தார்.
மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர். நேரம் செல்ல செல்ல கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால், மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே சமயத்தில், கடலுார் மாவட்டத்தில் 259 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும்,  போக்குவரத்து கழக அதிகாரிகள் தவறான புள்ளி விபரங்களை கொடுக்கின்றனர்.
எனவே, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளர் நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார்.

