/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெலாந்துறை பாசன வாய்க்காலை 'காணோம்' 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் விவசாயிகள் பாதிப்பு
/
பெலாந்துறை பாசன வாய்க்காலை 'காணோம்' 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் விவசாயிகள் பாதிப்பு
பெலாந்துறை பாசன வாய்க்காலை 'காணோம்' 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் விவசாயிகள் பாதிப்பு
பெலாந்துறை பாசன வாய்க்காலை 'காணோம்' 20 ஆண்டுகளாக தண்ணீர் வராமல் விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 17, 2024 02:39 AM

ஸ்ரீமுஷ்ணம் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிக்காக பெலாந்துறை வாய்க்கால் வெட்டப்பட்டது. வெள்ளாற்று அணைக்கட்டில் இருந்து பிரியும் இந்த வாய்க்கால் மூலம் பாளையங்கோட்டை ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மேலும், ஏரியில் இருந்து உபரி நீர் வீராணத்திற்கு செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
25 கி.மீ., நீளம் உள்ள இந்த வாய்க்கால் டி.வி.புத்தூர், வண்ணான்குடிகாடு, ராஜேந்திரப்பட்டினம், குணமங்கலம், கள்ளிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ வக்காரமாரி, தேத்தாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
மேலும் இந்த பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் மூலம் 22 ஏரிகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டதால், இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் ஏரிகள், வாய்க்கால்கள் துார் வாரப்படாமல் துார்ந்துள்ளன. தற்போதைய நிலையில், பெலாந்துறையில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி மதகு வரை மட்டுமே பிரதான வாய்க்காலில் தண்ணீர் வருகிறது.
அதன் பிறகு, தண்ணீர் செல்ல வழியில்லாமல், விவசாய வயல்களில் தண்ணீர் புகுந்து, ஆண்டு தோறும், 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் தெரு வாய்க்கால் பகுதியில் தொடங்கி வலசக்காட்டில் உள்ள பாண்டியன் ஏரி, மற்றும் பாளையங்கோட்டை பெரிய ஏரி வரை உள்ள 12 கி.மீ. தூரம் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதே இல்லை. வாய்க்கால்கள் காடாக மாறியுள்ளன.
பாசனத்திற்காக பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த பகுதிகளுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பெலாந்துறை பிரதான பாசன வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள 22 ஏரிகள், 25 கி.மீ., துாரம் உள்ள பிரதான வாய்க்கால்கள், 50 கி.மீ. தூரத்திற்கு மேல் உள்ள கிளை வாய்க்கால்கள், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரப்படுவது போல் முழுவதுமாக தூர் வார வேண்டும் என, விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

