/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருப்பாதிரிப்புலியூரில் புதிய மேம்பாலம் கட்ட... ஆயத்தம்; கெடிலம் ஆற்றில் மண் பரிசோதனை துவக்கம்
/
திருப்பாதிரிப்புலியூரில் புதிய மேம்பாலம் கட்ட... ஆயத்தம்; கெடிலம் ஆற்றில் மண் பரிசோதனை துவக்கம்
திருப்பாதிரிப்புலியூரில் புதிய மேம்பாலம் கட்ட... ஆயத்தம்; கெடிலம் ஆற்றில் மண் பரிசோதனை துவக்கம்
திருப்பாதிரிப்புலியூரில் புதிய மேம்பாலம் கட்ட... ஆயத்தம்; கெடிலம் ஆற்றில் மண் பரிசோதனை துவக்கம்
ADDED : ஜன 10, 2024 01:43 AM

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே, ரூ.22.15 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு, மண் பரிசோதனை பணி துவங்கியது.
கடலுார் மாநகரின் மையப் பகுதியின் குறுக்கே கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே, போக்குவரத்திற்காக, ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் மூலம் கடலுார் வழியாக, புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வந்தது.
100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் பலவீனமடைந்து, இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால், இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் அருகிலேயே புதிய மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், நகரப்பகுதியில் ஒரு வழிப்பாதை அவசியமாகிறது.
இதன் காரணமாக, கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிய பாலம் கட்ட ஆய்வு நடத்தினர்.
பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்த இடத்தில், புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, கெடிலம் ஆற்றில் புதியதாக மேம்பாலம் கட்டுவதற்கு 22.15 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து, திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதனால், இரும்பு பாலம் பகுதியில் ராட்சத துாண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இந்த பணி முடிந்தவுடன், பழைய அண்ணா பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. 280 மீட்டர் நீளம், 12.05 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. இப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, பழைய இரும்பு பாலம் இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், அண்ணா பாலம் மற்றும் புதிய பாலம் ஒரு வழிப்பாதையாக செயல்படும். இதனால், அண்ணா பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

