
கடலுார் : கடலுாரில் மாணவ, மாணவிகளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., 6 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
கடலுாரில், விஷன் பவுண்டேஷன் சார்பில் கடலுாரைச் சேர்ந்த 19 ஏழை, எளிய பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் உட்பட 38 பேருக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., 6 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகைக்கான காசோலை வழங்கினார்.
டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'விஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக 1.38 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெறும் மாணவ, மாணவிகள் பெற்றோரின் நிலை அறிந்து நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். வரும் காலங்களில் அதிக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளோம்' என்றார்.
நிகழ்ச்சியில் கோல்டன் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் சண்முகம், சேகர், மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.