/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
/
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
ADDED : ஜன 17, 2024 01:47 AM
கடலுார் : தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று, கடந்த 6ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக 2,600 ரூபாய், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு 1,900 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதனை கடைபிடிக்காமல் அதிக வாடகை கோரும் இயந்திர உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை கோரி, விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதி வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.

