/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணி... ஜரூர்; இறுதி கட்டத்தில் பாலம் கட்டுமான பணிகள்
/
சிதம்பரம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணி... ஜரூர்; இறுதி கட்டத்தில் பாலம் கட்டுமான பணிகள்
சிதம்பரம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணி... ஜரூர்; இறுதி கட்டத்தில் பாலம் கட்டுமான பணிகள்
சிதம்பரம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணி... ஜரூர்; இறுதி கட்டத்தில் பாலம் கட்டுமான பணிகள்
ADDED : ஜன 17, 2024 02:26 AM

சிதம்பரம் : விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கடலுாரில் இருந்து சிதம்பரம் வரையிலான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், பாலம் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்ற 2012 ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து, 6 ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2021ல் பணிகள் துவங்கியது.
விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுச்சாலையில் இருந்து துவங்கும் இச்சாலை வளவனுார், கண்டமங்கலம், புதுச்சேரி, கடலூர், ஆலப்பாக்கம், பு.முட்லுார், சி.முட்லுார், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை செல்கிறது.
சாலை நான்கு பிரிவுகளாக தனித்தனி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, ஒரே நேரத்தில் பணிகள் துவங்கியது. இதில், கடலுார் பூண்டியாங்குப்பத்தில் இருந்து, சீர்காழி சட்டநாதபுரம் வரையில் ஒரு பிரிவாக பணிகள் நடந்து வருகிறது. இப்பணி தற்போது 90 சதவீதம் முடிந்துள்ளது.
ஆனாலும், பு.முட்லுார், சி.முட்லுார் பகுதியில், நில ஆர்ஜிதம் தொடர்பாக கோர்ட் வழக்குகள் இருந்ததால், இப்பகுதிகளில் மட்டும் பணிகள் துவங்கப்படாமலேயே இருந்தது.
சி.முட்லுார் வெள்ளாற்றில் மட்டும் பாலம் கட்டப்பட்டது. மற்ற பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோர்ட் உத்தரவை தொடர்ந்து, பணிகள் துவங்கியது.
பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.
அதில் சிதம்பரம் பு.முட்லுாரில், வயல்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணிகளும், அதே போல், சி.முட்லுாரில் - பிச்சாவரம் வளையும் சந்திப்பில் பாலம் கட்டும் பணி, சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடி மற்றும் வல்லம்படுகையில் பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பு.முட்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பாலத்தின் இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது.
கடலுாரில் இருந்து பு.முட்லுார் வரை சாலை பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளதால், ஏற்கனவே, கடும் சிரமத்திற்கிடையே பயணிகள் சாலையில் பயணித்த நிலையில், தற்போது, சிரமமின்றி, பயணம் செய்து வருகின்றனர்.
கடலுார்- சிதம்பரம் இடையே 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

