/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாழையில் இலைக்கருகல் நோய் கடலுார் விவசாயிகள் கவலை
/
வாழையில் இலைக்கருகல் நோய் கடலுார் விவசாயிகள் கவலை
ADDED : பிப் 06, 2024 04:14 AM

கடலுார்: கடலுார் மலைக்கிராமங்களில் சாகுபடி செய்துள்ள வாழையில் இலைக்கருகல் நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலுார் அருகே உள்ள மலைக் கிராமங்களான ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், எஸ்.புதுார், ஒதியடிக்குப்பம், சாத்தாங்குப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பூவன், நேந்திரம், ரஸ்தாளி, நாடு, ஏளக்கி உள்ளிட்ட பல்வேறு வகை வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நன்றாக வளர்ந்து வரும் வாழையில் இலைக் கருகல் நோய் ஏற்பட்டு, காய்ந்து வருகின்றன. தொடர்ந்து, இலை காய்ந்தால், மரம் பாதிக்கப்பட்டு, மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர்.
நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி கூறுகையில், சத்து குறைபாடு காரணமாக, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. நிலத்தில், தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்ததால் பாஸ்பரஸ் சத்து குறைபாடு உருவாகியுள்ளது. இதன்காரணமாகவே, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன.
இதற்கு மண் வழியாக தேவையான உரம் கொடுப்பதைவிட, நீரில் கரையக்கூடிய பாஸ்பரஸை, வாழை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், இலைகள் காய்வது குறையும்.
அடி உரம் போடுவதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.