/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 10 நாணயம் வாங்க பஸ் கண்டக்டர்கள் 'அடம்'
/
ரூ. 10 நாணயம் வாங்க பஸ் கண்டக்டர்கள் 'அடம்'
ADDED : ஜன 10, 2024 12:06 AM
நாட்டில் தற்போது, ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ளன. பத்து ரூபாய் நாணயம் தவிர, மற்ற நாணயங்களை அனைத்து தரப்பு மக்களும் கொடுக்கல் வாங்கலுக்கு உபயோகத்தில் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், 10 ரூபாய் நாணயத்தை மட்டும் வங்கிகள் உட்பட பல்வேறு வியாபார நிறுவனங்கள், பஸ் கண்டக்டர்கள், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
அரசு ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுப்பதால் சில சமயங்களில் தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில், பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால், கண்டக்டர்கள், பயணிகளிடையே தகராறு ஏற்படுகின்றது. அப்போது, தாங்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்கினாலும், மற்ற பொதுமக்களிடம் கொடுக்கும்போது அவர்கள் வாங்க மறுப்பதாக கண்டக்டர்கள் கூறுகின்றனர்.
எனவே, பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் மாவட்டம் நிர்வாகம் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

