/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரச்னைகளை தீர்க்காத மாநகராட்சியை கண்டித்து...போராட்டம் : தலைதுாக்க துடிக்கும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகுமா?
/
பிரச்னைகளை தீர்க்காத மாநகராட்சியை கண்டித்து...போராட்டம் : தலைதுாக்க துடிக்கும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகுமா?
பிரச்னைகளை தீர்க்காத மாநகராட்சியை கண்டித்து...போராட்டம் : தலைதுாக்க துடிக்கும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகுமா?
பிரச்னைகளை தீர்க்காத மாநகராட்சியை கண்டித்து...போராட்டம் : தலைதுாக்க துடிக்கும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகுமா?
ADDED : ஜூன் 15, 2025 12:49 AM

காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடக்கும் பிரச்னைகளை கண்டித்து அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. மேயருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் இருப்பதால், அது தங்களுக்கு சாதகமான நிலையை மக்களிடம் உருவாக்கும் எனவும், அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 2021ல் தரம் உயர்ந்தது. பெருநகராட்சியாக இருந்த நிர்வாகம், மாநகராட்சியாக மாறும்போது, அதற்கேற்ற ஊழியர்கள், அதிகாரிகள் நியமனம், நிதி ஒதுக்கீடு, அடிப்படை பிரச்னைகளுக்கான முன்னுரிமை போன்றவை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்ந்தது முதலே, இன்று வரை பல்வேறு பிரச்னைகள் மாநகராட்சி நிர்வாகத்தில் நடந்தபடியே உள்ளன.
தலைவலி
பாதாள சாக்கடை பிரச்னை, சாலைகள் சீரமைக்கப்படாதது, பணியாளர் பற்றாக்குறை, சுகாதார சீர்கேடு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்னைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட முழுமையாக இல்லாத சூழலில், தி.மு.க., சார்பில், அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த மாதம் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நடத்திஉள்ளனர்.
அப்போது, மேற்கண்ட சம்பவங்களால் தி.மு.க., மீது, பகுதிவாசிகளுக்கு தவறான பார்வை எழுந்துள்ளதாக பேசப்பட்டதாக தெரிகிறது.
எனினும் தேர்தல் பணிகளை தி.மு.க., துவங்கி உள்ள நிலையில், அ.தி.மு.க., சார்பில், எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளை கையில் எடுக்க திட்டமிட்டுஉள்ளது.
அதற்காக, மாநகராட்சி பிரச்னைகளை மக்களிடம் தொடர்ந்து பேசி வருவதோடு, நிர்வாகத்தில் நடக்கும் பிரச்னை, முறைகேடுகளையும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் குப்பை அள்ளும் டெண்டரில் நடக்கும் முறைகேடு மற்றும் ஏராளமான திட்டங்களில் நடக்கும் விதிமீறல்களை, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் வெளிப்படையாக தெரிவிப்பதால், அவை அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைகிறது.
இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. இதுபற்றி, எங்கள் மாவட்ட செயலரிடமும் ஏற்கனவே தெரிவித்து வந்தோம். ஏற்கனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திஉள்ளோம்.
நடவடிக்கை
இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறை, நிர்வாக குளறுபடி, பாதாள சாக்கடை பிரச்னை, சொத்து வரி உயர்வு போன்றவை பற்றி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையிலும், மாவட்ட செயலர் சோமசுந்தரம் முன்னிலையிலும், காஞ்சிபுரத்தில் வரும் புதன்கிழமை பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தலைமை அறிவிப்பை தொடர்ந்து, அடுத்தடுத்து ஒவ்வொரு போராட்டமாக நடக்கும்.
குறிப்பாக, மேயர் மஹாலட்சுமிக்கு எதிராகவே, தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் செயல்படுகின்றனர். அது எங்களுக்கு சாதகமாக இருப்பதால், அதை சரியாக பயன்படுத்தி, மக்களை எங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.