ADDED : பிப் 06, 2024 11:03 AM
பெண்ணிடம் அத்துமீறல்
வாலிபர் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், வானையூர் கிராமத்தை சேர்ந்தவர், 19 வயது பெண். இவர் தனது உறவினரான வீரவல்லி கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த, 3ல் இரவு துாங்கிக் கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணி, 24, என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அருகில் படுத்திருந்த கீர்த்தனா கூச்சலிட்டதும், பாலசுப்பிரமணியன் ஓடிவிட்டார்.
இது குறித்து கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
சின்னதாராபுரத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் காசிபாளையம் உள்ளது. இங்குள்ள பல்வேறு கிராம மக்கள், பணிகள் நிமித்தமாக தினந்தோறும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் காசிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சில் ஏறி செல்ல வேண்டும். ஆனால் இங்குள்ள நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. மழை, கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றாலை அமைத்தால் பாதிப்புவடவம்பாடி பொதுமக்கள் மனு
கடவூர் அருகேயுள்ள வடவம்பாடி பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் கடவூர் அருகில் வடவம்பாடியில், 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய நிலங்களின் அருகே, தனியார் சார்பில் உயர் கோபுர காற்றாலை விசிறி அமைக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், விவசாயத்தில் மகசூல் குறையும், பறவைகள், மாடுகள், ஆடுகள் வராது, நிலத்தடி நீர் மட்டம் குறையும் போன்ற விளைவுகள் ஏற்படும். இப்பகுதி வறட்சியான பகுதி என்பதால், மக்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காற்றாலை அமைத்தால், அனைத்து மக்கள் வேறு இடத்திற்கு குடியேற வேண்டி நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உண்டாகும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் ஆலோசனை
கரூர் மாநகர் மத்திய தெற்கு பகுதி, அ.தி.மு. க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி தலைமையில் நடந்தது.
அதில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், எம்.பி., தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகள், தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், எம்.பி., தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து பேசினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா, ஜெ., பேரவை இணை செயலாளர் பரமசிவம் உள்பட, பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலர் பா.ஜ.,வில் இணைந்தார்
கரூர் கிழக்கு மாவட்ட, பன்னீர் செல்வம் அணி செயலர், பா.ஜ.,வில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியின், கரூர் கிழக்கு மாவட்ட செயலராக இருந்தவர் டாக்டர் கதிரேசன், 45. இவர், பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகி, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
மேலும், குளித்தலை பகுதியை சேர்ந்த, தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், பா.ஜ.,வில் இணைந்தனர். மாநில பா.ஜ., மகளிர் அணி துணைத்தலைவர் மீனா, மாவட்ட பொதுச் செயலர் சக்திவேல் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மத்திய அரசு பட்ஜெட்
நகல் எரிப்பு போராட்டம்
குளித்தலை யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை வட்டார தலைவர் வாசுகி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நல்லம்மாள், பொருளாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பத்மாவதி, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், இத்துறைக்கு வழங்க வேண்டிய தொகை குறைத்தும், உணவு பொருட்கள் குறைத்தும் வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் காலமுறை ஊதியம், மே மாதம் முழு விடுமுறை, சிலிண்டர் தொகை முழுவதும் வழங்கல், காய்கறி ஒரு குழந்தைக்கு ரூபாய் 5 வீதம் வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என பேசினார்.
பின், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இறுதியில் மத்திய அரசு பட்ஜெட் நகல் எரிக்கப்பட்டது. குளித்தலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆசிரியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.,க்கு பாராட்டு விழா
குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில், நாட்டு இன நாய்கள் வளர்ப்போர் மற்றும் வேட்டைக்காரர் சங்கம் சார்பில், எம்.பி., பாரிவேந்தருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நாட்டு இன நாய்களையும், முயலையும் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, பாரம்பரியமாக நடைபெறும் முயல் வேட்டைக்கு அனுமதி வேண்டிய கோரிக்கை மனுவை, பாராளுமன்றம் வரை கொண்டு சென்றதோடு, மத்திய இணை அமைச்சரிடம் முறையிட்ட பெரம்பலுார் எம்.பி., பாரிவேந்தருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது.
ராணுவம், தீயணைப்பு, கடற்படை, காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறைக்கு நாட்டு இன நாய்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காவிரி ஆற்றில் அதிகாரிகள்
ஆதரவுடன் மணல் கடத்தல்?
குளித்தலை, காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தல் நடந்து வருகிறது.
மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, சிந்தலவாடி, லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், வதியம், மணத்தட்டை, நாப்பாளையம், கடம்பர்கோவில், பெரியபாலம், பரிசல் துறை, தண்ணீர்பள்ளி, சாந்திவனம், மருதூர், வீரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள காவிரி ஆற்றில் மணல் இயந்திர உதவியுடன் லாரிகளில் மணல் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குளித்தலை தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், குளித்தலை அரசு வழக்கறிஞருமான நீலமேகம், நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்களில், காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் போலீசார் அனுமதியுடன் மணல் கடத்தப்பட்டு வருவதாகவும், கடத்தலுக்கு உடந்தையாக உள்ள காவலர்கள். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மதுபான சந்துக்கடைகள். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போலீசார் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது என பதிவு செய்து, வாய்ஸ் மெசேஜ் செய்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தினமும் புத்தகம் வாசிக்கணும்
'தமிழ்க்கூடல்' விழாவில் கவிஞர் பேச்சு
''மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிக்க வேண்டும்,'' என, தமிழ்க்கூடல் விழாவில், கவிஞர் நாணற்காடன் பேசினார்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் மன்றம் மேம்பாட்டு திட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'தமிழ்க்கூடல்' விழா நடந்தது.
தலைமையாசிரியர் பெரியண்ணன் தலைமை வகித்தார். முதுகலை பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். முதுகலை தமிழாசிரியர் ராமு, தமிழாசிரியர் அம்சவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளரும், கவிஞருமான நாணற்காடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''மாணவர்கள் நாள்தோறும் புத்தகம் வாசிக்க வேண்டும். தினமும் புத்தகம் படிப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. பிற மொழியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளை தமிழ் மொழி பேசுபவர்களும் அறிந்துகொள்ள, மொழிபெயர்ப்பு மிகவும் உதவுகிறது,'' என்றார்.
விழாவில், தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியர் நவமணி, மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.