
தேடப்படும் குற்றவாளிகள்
மதுரை: கேரளா கோட்டயம் மதுசூதனன் 42. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜெயக்குமார் 36. இவர்கள் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் தனித்தனியே 20 ஆண்டுகளுக்கு முன் திருட்டு வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள இவர்களை தேடப் படும் குற்றவாளிகளாக மதுரை ஜே.எம். 4 நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆக.,14க்குள் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
6 கிலோ கஞ்சாவுடன் கைது
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பிரகாஷ் 32. மதுரை தெற்குவாசல் பாலம் அடியில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 6 கிலோ கஞ்சாவுடன் கீரைத்துரை போலீசார் கைது செய்தனர்.
டாக்டர்கள் மீது வழக்கு
மதுரை: காந்திநகர் மேகனா கிராந்தி 28. கண் மருத்துவர். இவரது கணவர் டாக்டர் கர்லாபதி ஆதித்யா கணேஷ் 29. இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கான ரூ.2 கோடி செலவை மேகனா கிராந்தி பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். 500 பவுன் நகைகள் வரதட்ணையாக கொடுத்தனர்.
தவிர ரூ.2 கோடி மதிப்புள்ள நகை பொருட்கள் பரிசாக வந்தன. அனைத்தையும் கணேஷின் பெற்றோர் டாக்டர்கள் சதீஷ்குமார், ஜானவி பெற்றுக்கொண்டதோடு, மருத்துவமனை கட்ட ரூ.5 கோடி கொடுத்தால் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ முடியும் என மிரட்டுவதாக போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரியிடம் புகார் அளித்தார். டாக்டர் குடும்பத்தினர் மீது அண்ணாநகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நுாதனமாக ரூ.2 லட்சம் திருட்டு
மதுரை: கேரளா இடுக்கியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மாற்றுத்திறனாளி. ஐந்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்தும் பலனிக்கவில்லை. இதனால் மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கம்பம் மணிகண்டன் என்பவர் மூலம் மகனை சுரேஷ் அழைத்து வந்தார்.
அங்கு வந்த மணிகண்டனின் நண்பர் கருப்பாயூரணி இளங்கோவன் 55, குறைந்த செலவில் சிகிச்சை அளித்து ஒரே நாளில் குணமாக்க முடியும் என ஆசை வார்த்தைக்கூறி இருவரும் ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்தனர். மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய் குறுக்கே வந்ததால் பலி
மதுரை: மாடக்குளம் திருமுருகன் 35. இவர் டூவீலரில் மாடக்குளம் மெயின் ரோட்டில் வந்தபோது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்ததில் திருமுருகன் வலது காலில் அடிபட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தொற்று காரணமாக கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருமுருகன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ்.கீழப்பட்டி சஞ்சய் 26. திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். எஸ்.கீழப்பட்டி செல்லையம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்தவர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) பேரையூருக்கு வந்தபோது, அரசு மருத்துவமனை அருகே நாய் குறுக்கிட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
வீட்டில் திருட்டு
மதுரை: திருமோகூர் சந்திரசேகர் 66. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக எலக்ட்ரீசியன். மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இவரது வீட்டில் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர் திருடிச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
மேலுார்: நரசிங்கம்பட்டி தனியார் தொழிற் சாலைக்கு நேற்று முன்தினம் இரவு தெற்குத்தெரு, சென்னகரம்பட்டி பகுதி பெண்கள் வேனில் வேலைக்கு சென்றனர். சென்னகரம்பட்டி ஆசிப் 27, ஓட்டினார்.
விநாயகபுரம் அருகே ரோட்டோர பள்ளத்தில் வேன் கவிழவே டிரைவர் தப்பி ஓடினார். இதில் வினோபா காலனி கலையரசி 39, சென்னகரம்பட்டி பாண்டியம்மாள் 45, உட்பட 8 பேர் காயமுற்றனர். டிரைவர் மது போதையில் இருந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மரம் விழுந்து பூ வியாபாரி பலி
சோழவந்தான்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எத்திலோடு காமாட்சிபுரம் சின்னத்துரை 65. இவர் சோழவந்தான் பேரூராட்சி சந்தை நுழை வாயிலில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று காலை வியாபாரம் செய்தபோது ஏற்கனவே முறிந்து தொங்கிய மரக்கிளை ஒடிந்து சின்னத்துரை மீது விழுந்ததில் காயமடைந்தார். சோழவந்தான் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
10 ஆண்டுகளாக போட்டி தேர்வு எழுதியவர் தற்கொலை
மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி வடக்கு தெரு முத்துக்குமார் மகன் பாலகிருஷ்ணன் 33. பொறியியல் பட்டதாரி. கடந்த 10 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுகள் எழுதி வந்தார். தேர்ச்சி பெறவில்லை. கடந்த வாரம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதிய பின் மன உளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று காலை வாடிப்பட்டி அருகே கொல்லத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.