/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதன் முதலாய்... மதுரையில் 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைகிறது : மேலுார் வஞ்சிநகரத்தில் கட்டமைப்புக்கு 'டெண்டர்'
/
முதன் முதலாய்... மதுரையில் 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைகிறது : மேலுார் வஞ்சிநகரத்தில் கட்டமைப்புக்கு 'டெண்டர்'
முதன் முதலாய்... மதுரையில் 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைகிறது : மேலுார் வஞ்சிநகரத்தில் கட்டமைப்புக்கு 'டெண்டர்'
முதன் முதலாய்... மதுரையில் 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைகிறது : மேலுார் வஞ்சிநகரத்தில் கட்டமைப்புக்கு 'டெண்டர்'
ADDED : ஜூலை 03, 2025 03:35 AM

மதுரை: மேலுார் வஞ்சிநகரத்தில் 278 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்பூங்காவிற்கு முதற்கட்டமாக 100 ஏக்கரில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் விடும் பணி தொடங்க உள்ளது.
மதுரையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) மூலம் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்பேட்டைகள் 7 இடங்களில் செயல்படுகின்றன. பெருநிறுவனங்களுக்கான தொழிற்பூங்கா அமைக்கப்படவில்லை. இதற்காக மதுரையில் திருச்சி - மேலுார் நெடுஞ்சாலைக்கு 3 கி.மீ., தொலைவில் மதுரை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் மேலுார் வஞ்சிநகரத்தில் 2006ல் தொழிற்பூங்கா அமைக்க அரசு தொழில் முன்னேற்ற கழகம் (சிப்காட்) திட்டமிட்டது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது மேலுார் வஞ்சிநகரத்தில் அரசுக்கு சொந்தமான 278 ஏக்கர் நிலம் சிப்காட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு இங்கு தொழில் செய்ய நிலம் ஒதுக்கப்படும். தோல் பயன்பாடு இல்லாத காலணி தொழிற்சாலைகள், கனரக இன்ஜினியரிங் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்க வாய்ப்புள்ளது. இதற்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் 'சுற்றுச்சூழல் அனுமதி கோரி 8 பி' படிவத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை பணிகளுக்கு டெண்டர்
ஒரே நிறுவனமே 200 ஏக்கர் நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெறுவதாக இருந்தாலும் வாய்ப்பளிக்கப்படும். அல்லது தொழிற்சாலைகளுக்கு ஏற்ப 4 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் அளவில் நிலம் 'பிளாட்' ஆக பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.
தொழில் துவங்குவதற்கான அடிப்படை வசதிகள் இருந்தால் தான் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன்வருவர் என்பதால் முதல் கட்டமாக 100 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.13 கோடிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யும் நிறுவனங்களுக்கான 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கும் நிறுவனம் ரோடு, மழைநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு, சிப்காட் அலுவலகம் அமைத்த பின்பே தொழில் நிறுவனங்களுக்கான பிளாட்கள் ஏலம் விடுவதற்கான டெண்டர் பணி துவங்கும்.
அடிப்படை பணிகளுக்கான டெண்டரில் 11 நிறுவனங்கள் பங்கேற்றதில் ஒரு நிறுவனம் நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவானது. அந்நிறுவனத்தையும் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டதால் விரைவில் டெண்டர் இறுதி செய்யப்படும்.
2026 ஜனவரியில் முதலீட்டாளர்களுக்கான பிளாட்கள் தயாராகி விடும் என்பதால் தொழில் துவங்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்தது 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மடீட்சியா முன்னாள் தலைவர் லட்சுமிநாராயணன் கூறுகையில்,''சிப்காட்டில் பெருந்தொழில் நிறுவனங்கள் அமையும் போது அதன் உபதொழில்களை செய்வதற்கான குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் செய்வதற்காக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதை மேலுார் தொழிற்பூங்காவில் செய்யப்படும்'' என்றார்.