/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
/
மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
ADDED : ஜன 10, 2024 06:53 AM

மதுரை, : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த துணைமேயர் நாகராஜன் 49, அலுவலகத்தின் மீது ரவுடிகள் இருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். குடும்பத்துடன் துணைமேயர் வீட்டினுள் பதுங்கியதால் உயிர் தப்பினார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் அருகே துணைமேயர் நாகராஜனின் வீடு, அலுவலகம் அடுத்தடுத்து உள்ளது. நேற்று மாலை 6:30 மணியளவில் அலுவலகத்தில் நாகராஜன் இருந்தபோது, ரவுடிகள் இருவர் சத்தம் போட்டவாறே ஆயுதங்களுடன் வந்தனர். இதை கவனித்த நாகராஜன் உடனடியாக வீட்டிற்குள் சென்று பதுங்கிக்கொண்டார். ரவுடிகள் ஆயுதங்களால் அலுவலக கண்ணாடி, நாகராஜனின் புல்லட்டை சேதப்படுத்தி தப்பினர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் இத்தாக்குதல் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், முகமது இஸ்மாயில் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
துணைமேயர் நாகராஜன் கூறுகையில், ''வந்தவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். எதற்காக தாக்குதல் நடத்தினார்கள் எனத்தெரியவில்லை. ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக்கொண்டதால் நான், மனைவி, குழந்தைகள் உயிர் பிழைத்தோம்,'' என்றார்.

