/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலால் வழித்தட உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி
/
பஸ் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலால் வழித்தட உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி
பஸ் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலால் வழித்தட உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி
பஸ் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலால் வழித்தட உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூன் 19, 2024 10:58 AM
நாமக்கல்: 'பஸ் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு, வழித்தட உரிமைத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?' என, நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் பாரதிவாணன், 41. இவர், 2023 மார்ச்சில், சேலம் கந்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல, எஸ்.ஆர்.பி.எஸ்., என்ற தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, கண்டக்டரிடம் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டபோது, பத்து ரூபாய்க்கான, 'பார்சல்' கட்டண சீட்டை வழங்கியுள்ளார்.
கந்தம்பட்டியில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை அரசு நிர்ணயித்துள்ள கட்டணம், ஏழு ரூபாய். அதற்கு பதில், 'பத்து ரூபாய் ஏன் வசூல் செய்கிறீர்கள்' என கேட்டு, மீதி தொகை மூன்று ரூபாய் கண்டக்டரிடம் பாரதிவாணன் கேட்டுள்ளார். ஆனால், கண்டக்டர் தரக்குறைவாக பதில் அளித்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பயணி பாரதிவாணன், சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.
விசாரணையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவுப்படி, பஸ் உரிமையாளர், மூன்று ரூபாயை வரைவோலை மூலம் பாரதிவாணனுக்கு அனுப்பி உள்ளார். சரியான நடவடிக்கையை போக்குவரத்து அலுவலர் எடுக்காததால், பாரதிவாணன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2023 நவ.,ல் வழக்கு தொடுத்தார்.
விசாரணை நடத்திய, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், கூடுதலாக, மூன்று ரூபாய் கட்டணம் வசூலித்ததற்கு இழப்பீடாக, 1,000 ரூபாய், வழக்கு செலவாக, 1,000 ரூபாய், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, பஸ் உரிமையாளர், நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். பஸ் உரிமையாளர், இரண்டு வார காலத்துக்குள், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, 'வரும் காலங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் தொகையை பயணிகளிடம் வசூலிக்க மாட்டோம்' என, உறுதி மொழி வழங்க வேண்டும்.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு, ஏன் பஸ் வழித்தட உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்பதற்கு, சரியான முகாந்திரத்தை வழங்க வேண்டும். அவற்றை செய்ய தவறினால், வழித்தட உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்படும்.
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர், இரண்டு வார காலத்திற்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட கண்டக்டரின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததற்கான ஆணை நகலை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், உண்மைக்கு புறம்பான சாட்சியத்தை வழங்கியதாக, சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் (மேற்கு) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரவிட்டனர்.